×

உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அகிலேசுக்கு இசட் பிளஸ் வாபஸ்: உள்துறை அமைச்சகம் முடிவு

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேசுக்கு வழங்கப்பட்ட இசட் பிளஸ் மற்றும் கறுப்பு பூனைப்படை பாதுகாப்பை வாபஸ் பெற மத்திய  உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்து  முடிந்த மக்களவை தேர்தலில் முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, முன்னாள்  முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்து படுதோல்வி அடைந்தது. இக்  கூட்டணி பெரும்பான்மையான  இடங்களை கைப்பற்றும் என்று எதிர்பார்த்த நிலையில், இம்மாநிலத்தில் பாஜ கட்சி 62 தொகுதிகளை கைப்பற்றியது. மாயாவதி- அகிலேஷ் யாதவ்  கூட்டணி 15 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. இதனால்  இரு கட்சிகளின் தலைவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன், அகிலேஷ் யாதவ் உடனான கூட்டணி முறிந்தது என்று மாயாவதி அறிவித்தார். இது, இசட் பிளஸ் பாதுகாப்பு மற்றும்  கறுப்பு பூனைப்படை வளையத்தில் உள்ள அகிலேஷ் யாதவ்க்கு பெரும் பின்னடைவை  ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன் சமாஜ்வாதி  கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான நீரஜ் சேகருக்கு, அடுத்த ஆண்டு வரை பதவிக்காலம் உள்ள நிலையில், திடீரென அவர் ராஜினாமா செய்தார்.  தொடர்ந்து அவர், உத்தர  பிரதேசம் மேல்சபை உறுப்பினராக பாஜ சார்பில் களமிறக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீரஜ் சேகரின் திடீர் ராஜினாமாவை தொடர்ந்து, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு மாநிலங்களவையில் 9 உறுப்பினர்களும், மக்களவையில் 5  உறுப்பினர்களும் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், அகிலேசுக்கு வழங்கப்பட்ட இசட் பிளஸ்  மற்றும் கறுப்புப் பூனைப்படை பாதுகாப்பை வாபஸ் பெற,  மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் இன்று வெளியிட்ட ெசய்தியில், ‘மத்திய  உள்துறை அமைச்சகம் அகிலேசுக்கு  வழங்கப்பட்ட இசட் பிளஸ் மற்றும் கறுப்புப் பூனைப்படை பாதுகாப்பை வாபஸ் பெற முடிவு செய்துள்ளது’ என்று  தெரிவித்துள்ளது.


Tags : Z plus return to former Chief Minister of Uttar Pradesh Achilles: Home Ministry
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...