ராஜராஜசோழனை பற்றி அவதூறு பேச்சு: இயக்குனர் ரஞ்சித்துக்கு ஜாமின் வழங்கியது கும்பகோணம் நீதிமன்றம்

கும்பகோணம்: ராஜராஜ சோழன் பற்றி கருத்து தெரிவித்த வழக்கில் இயக்குனர் ரஞ்சித்துக்கு கும்பகோணம் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாள் கடைத்தெருவில் கடந்த ஜூன் 5ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் ராஜராஜசோழனை பற்றி அவதூறாக பேசினார்.இதையடுத்து ஜூன் 10ம் தேதி திருபனந்தாள் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கவிதா, பா. ரஞ்சித் மீது  3 பிரிவுகளின்  கீழ் வழக்கு பதிவு செய்தார். இதனையடுத்து இயக்குனர் பா.ரஞ்சித் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கும்பகோணம் நீதிமன்றத்தில் 15 நாட்களுக்குள் இருநபர் ஜாமீன் கொடுத்து , 3 நாட்களுக்கு திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில்  ஜாமீன் வழங்கினார்.  

இதையடுத்து இன்று காலை இயக்குனர் பா. ரஞ்சித் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரை விசாரித்த நீதித்துறை நடுவர் நீதிபதி பாலசுப்பிரமணியன் இருநபர் ஜாமீனை ஏற்று,  நாளை முதல் 3 நாட்களுக்கு திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் காலை 10.30 மணிக்கு கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டு ரஞ்சித்துக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அதைத்தொடர்ந்து அவர் கோர்ட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.

Related Stories: