கிருஷ்ணகிரி அருகே 2500 ஆண்டு பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியின் தொன்மையையும், பெருங்கற்கால எச்சங்களையும். வெளிக் கொண்டுவரும் நோக்கில்   அரசு அருங்காட்சியகம் மற்றும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு குழுவினர் இணைந்து சுமார் 2500 ஆண்டு பழமையான கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி அடுத்த திப்பனப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சஜ்சலப்பள்ளில் கிராமத்தில் சுமார் 2500 ஆண்டுகள் பழமையான நடுகல்லும் வரலாற்று கல்வெட்டும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த கல் குத்துக்கல் அல்லது நெடுங்கல் என அழைக்கப்படுகிறது. இது வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகவே இறந்தவர்களின் நினைவாக அமைக்கப்படும் நினைவு சின்னமாக கருதப்பட்டது. மேலும் இந்த கல்  எட்டு அடி உயரமும், நான்கு அடி சுற்றளவும் கொண்டுள்ளது.

இக்கல் அப்பகுதியின் தலைவனுக்கானதாக இருக்கலாம். உலகம் முழுவதும் இறந்தவர்களுக்கு குத்துக்கல் வைக்கும் வழக்கம் அன்றைய காலகட்டத்தில் இருந்துள்ளது. குத்துக்கல்லைத் தமிழகத்தில் முன்னோர்களாக நினைத்து வணங்கி வழிபட்டு வந்துள்ளனர். மேலும் இது போன்ற குத்துக்கல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது 9வது இடமாகும் என தொல்லியல் துறை குழுவினர் கூறுகின்றனர்.

மேலும் இதற்கு அருகே சுமார் 300 ஆண்டுகள் பழமையான மாறுபட்ட உருவ அமைப்பில் புலிகுத்திப்பட்டான் என்று கூறப்படும் கல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதில் வீரன் மொட்டை தலையுடனும், மீசையுடனும் உள்ளான். அவன் புலியுடன் சண்டையிடும் காட்சியும், அருகில் தீக்குளித்து இறந்த அவனது இரு மனைவிகளின் உருவமும் அதில் பதிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த மாதிரியான கல்வெட்டுகளில் தாசரப்பள்ளி மாணவர்கள் ஆர்வம் காட்டுவதால் அவர்களுக்கு அருங்காட்சியக காப்பளார் கல் வெட்டுகள் குறித்து விரிவான விளக்கம் அளித்தார்.

Related Stories:

>