கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

புதுடெல்லி: கடும் எதிர்ப்புகளுக்கு பிறகு மோட்டர் வாகன சட்டத்திருத்த மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. மோட்டர் வாகன சட்டத்திருத்த மசோதாவுக்கு குரல் வாக்கு மூலம் மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. சாலை விபத்துக்கள் தற்போது அதிகமாக நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க மோட்டார் வாகனச் சட்டத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்திருத்தத்தில், தற்போது உள்ள அபராதத்தை விட பன்மடங்கு அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்த மோட்டார் வாகன திருத்த மசோதாவை மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் தாக்கல் செய்தார். இதற்கான விவாதம் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்று வந்தது. பல்வேறு கட்சி உறுப்பினர்களும் இது தொடர்பாக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அப்போது, பேசிய திமுக எம்.பி.கனிமொழி, நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஒரு பரிந்துரையை கூட மசோதாவில் ஏன் சேர்க்கவில்லை? இந்த மசோதாவில் இருந்து மாநிலங்கள் விலக்கு பெற்றுக் கொள்ளலாம் என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார்.

ஆனால் இது உறுதுமொழி மட்டுமே. இது சம்பந்தமாக எந்தவொரு விஷயமும் மசோதாவில் இடம்பெறவில்லை. மாநில உரிமைகளில் வரம்பு மீறும் செயலில் மத்திய அரசு ஈடுபடுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை சாலைப் போக்குவரத்து மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இது லாபம் ஈட்டும் அமைச்சகம் அல்ல. இருப்பினும் கடைசி மைல் தொலைவு வரை போக்குவரத்து சேவையை வழங்குவதை நாங்கள் உறுதிபடுத்தி வருகிறோம். இதனை தனியாரின் கையில் ஒப்படைத்தால், அவர்கள் லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுவர். மாநில அரசு சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், மத்திய அரசு எதற்காக தலையிட வேண்டும்? என பல்வேறு கேள்விகளை எழுப்பினார். மேலும், மோட்டார் வாகன திருத்த சட்டத்தின் படி , ஓட்டுனர்களுக்கு கல்வித்தகுதி கட்டாயம் கிடையாது என்ற அமசத்தால் யாரும் பள்ளிக்கூடத்திற்கு செல்ல விரும்பமாட்டார்கள் என மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். நாட்டின் 100% கல்வி அறிவு என்ற இலக்கை நோக்கி பயணம் செய்யும் நிலையில், இத்தகைய சட்டங்களால் கல்வி கற்பவர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவுக்கு குரல் வாக்கு மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Related Stories: