×

காவல்துறையினர் வரதட்சணை, பரிசுப்பொருட்கள் வாங்கக் கூடாது: அனைத்துக் காவல்துறையினருக்கும் டிஜிபி சுற்றிக்கை

மதுரை: காவல்துறையினர் வரதட்சணை, பரிசுப்பொருட்கள் வாங்கக் கூடாது என்று அனைத்துக் காவல்துறையினருக்கும் டிஜிபி சுற்றிக்கை அனுப்பியுள்ளார். முன்னதாக, மதுரை, எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த தென்னரசு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், நான் காவல்துறையில் நேரடியாக எஸ்ஐ பணிக்கு தேர்வு செய்யப்பட்டேன். சிறப்பான பணிக்காக பல்வேறு விருதுகள் பெற்றுள்ளேன். எனக்கு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. தனிப்பட்ட பிரச்சனைக்காக என் மீதுள்ள வழக்கை காரணம் காட்டி, எனக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வு கடந்த 18.8.2014ல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து எனக்கு பதவி உயர்வு மற்றும் பணப்பலன்கள் வழங்க உத்தரவிட வேண்டும், என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், காவல்துறையில் இன்ஸ்பெக்டர் போன்ற பதவி உயர்வுக்கு சம்பந்தப்பட்டவரின் பணிப்பதிவேடுகள் மற்றும் நன்னடத்தையை ஆய்வு செய்வது அவசியம். தண்டனை பெற்றவரை இன்ஸ்பெக்டர் பதவி உயர்வுக்கு பரிசீலிக்க முடியாது. பணியில் நேர்மையாக உள்ளவர்களை மட்டுமே பதவி உயர்வுக்கு பரிசீலிக்க வேண்டும். மேலும், காவல்துறையில் பரிசுப்பொருட்கள், பூங்கொத்துகள் வழங்குவது தற்போது அதிகரித்துள்ளது. காவல்துறை நடத்தை விதியில் பரிசுப்பொருட்கள், வெகுமதி, வரதட்சணை போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. இதேபோல், பூங்கொத்து, பழங்கள் மற்றும் பரிசு பொருட்கள் பெறுவதும் விதிக்கு எதிரானதே. இவை தடுக்கப்பட வேண்டும்.

எனவே, சீருடை பணியில் உள்ளவர்கள் ஒழுக்கம் மற்றும் நன்மதிப்பை காப்பாற்ற தேவையான உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகள் பூங்கொத்துகள், பரிசுப்பொருட்கள், வரதட்சணை பெறக்கூடாது என்பதை உறுதிபடுத்தும் வகையில் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும், தமிழக டிஜிபி 6 வாரத்திற்குள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும், என உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், காவல்துறையினர் வரதட்சணை, பரிசுப்பொருட்கள் வாங்கக் கூடாது என அனைத்துக் காவல்துறையினருக்கும், டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் சுற்றறிக்கை ஒன்றினை காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். அதில்,  பரிசுப்பொருட்கள், வரதட்சணை வாங்கக் கூடாது என்பதோடு, பூங்கொத்துகள் பரிமாறிக்கொள்ளக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.


Tags : Police, Dowry, Gifts, DGP Tripathy, Circular
× RELATED ஜன.17 அரசு விடுமுறை என்பதால் பிப்.4-ம்...