கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,500 கன அடியில் இருந்து 7,000 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: கர்நாடக மாநில அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் காவிரி நீர்வரத்து வினாடிக்கு 1,500 கனஅடியில் இருந்து 7,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே காவிரி நீர் மேலாண்மை ஆணையம், தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை வழங்க கர்நாடகத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை நிறைவேற்ற கர்நாடக அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக மக்களின் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கவும், அதேபோல கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கடந்த 16ம் தேதி நள்ளிரவு கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 18ம் தேதி தண்ணீர் திறப்பு 8,000 கன அடியாக அதிகரித்தது. இந்த நீர் நேற்று தமிழக எல்லையை வந்தடைந்த நிலையில், இன்று காலை மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது.

காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு ஆயிரத்து 500 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் டெல்டா பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது, 1,500 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர் படிப்படியாக உயர்ந்தது. இந்த நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு வினாடிக்கு 7,000 கன அடியாக அதிகரித்தது. நீர் வரத்து திடீரென அதிகரித்ததால், கோட்டையூர், பண்ணவாடி, செட்டிபட்டி பரிசல் துறைகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக பரிசல் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், காவிரி கரையில் அமைக்கப்பட்டிருந்த மீனவர் முகாம்களை மீனவர்கள் அவசர அவசரமாக காலி செய்து மேடான பகுதிக்கு எடுத்துச் சென்றனர். மேட்டூர் அணைக்கு போதிய அளவு காவிரி நீர் வந்தவுடன், சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>