அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்த போது என்ன பேசினார் என்பதை நரேந்திர மோடி விளக்க வேண்டும்: ராகுல் காந்தி ட்வீட்

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்த போது, நரேந்திர மோடி என்ன பேசினார் என்பதை விளக்க வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யுங்கள் என பிரதமர் மோடி கேட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அப்படி எந்த கோரிக்கையையும் டிரம்பிடம் பிரதமர் மோடி வைக்கவில்லை என இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்தாலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன. அதுமட்டுமல்லாது, இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

பிரதமர் பதில் அளிக்க வலியுறுத்தி முழக்கமிட்டதால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் இவ்விகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி், காஷ்மீர் பிரச்னை தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான் இடையே சமரசம் பேசவேண்டும் என்று தன்னை மோடி அழைத்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அது உண்மையாக இருந்தால் இந்தியாவின் விருப்பத்துக்கும், 1972ம் ஆண்டின் சிம்லா ஒப்பந்தத்துக்கும் மோடி துரோகம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் வீரியம் குறைந்த மறுப்பு மட்டும் போதாது. மோடிக்கும் ட்ரம்புக்கும் இடையில் என்ன பேச்சுவார்த்தை நடந்தது என்று மோடி கண்டிப்பாக விளக்கம் அளிக்க வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: