×

முகிலனை 3 நாட்கள் விசாரிக்க அனுமதி கோரிய நிலையில், 3 மணி நேரம் விசாரிக்க சிபிசிஐடி-க்கு கரூர் நீதிமன்றம் அனுமதி

கரூர்: சமூக செயற்பாட்டாளர் முகிலனை 3 மணி நேரம் மட்டுமே சிபிசிஐடி போலீசார் விசாரிக்க கரூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் முகிலன் கடந்த பிப்.14ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விடியோவை சென்னையில் செய்தியாளர்களுக்கு வெளியிட்டார். மறுநாள் சென்னை எழும்பூரிலிருந்து மதுரைக்குச் செல்வதற்காக வந்த முகிலன் மாயமானார். இதுகுறித்த அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடைபெற்ற நிலையில், பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த மாதம் 6ம் தேதி திருப்பதி ரயில் நிலையத்தில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார்.

மேலும், கரூர் குளித்தலை காவல் நிலையத்தில் ராஜேஸ்வரி என்ற பெண் கொடுத்த பாலியல் புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த 10ம் தேதி கரூர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்திய போது, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் முகிலனை திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். இந்த நிலையில், இந்த வழக்கும் சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, முகிலனை மூன்று நாட்கள் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கோரி கரூர் நீதித்துறை நடுவர் மன்றம் எண்- 2ல் சிபிசிஐடி போலீசார் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்ற போது முகிலன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, தன்னால் சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு  ஒத்துழைக்க முடியாது என்று முகிலன் கூறினார். மேலும், தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து, ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஐ.ஜி. டி.ஐ.ஜி மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் தான் உண்ணாவிரதம் இருந்து வருவதாக நீதித்துறை நடுவர் முன்பு முகிலன் கூறினார்.

மேலும் தன்னை காவல்துறையினர் தாக்கியதாக புகார் அளித்தார். இந்த நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை இன்றைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து  2வது நாளாக இன்று முகிலன் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். முகிலனை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்ட சிபிசிஐடி-யின் கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்து விட்டார். மேலும் 3 மணி நேரம் மட்டுமே விசாரிக்க வேண்டும் அதுவும் இன்றே விசாரிக்க என உத்தரவிட்டார். அப்போது முகிலனின் வழக்கறிஞரும் உடன் இருப்பார் என்று நிபந்தனை விதித்துள்ளார்.

Tags : Mukhilan, Social Activist, CBCID, Inquiry, 3 hours, Karur Court
× RELATED திருப்பத்தூரில் உள்ள நகராட்சி பூங்கா...