ரூட் தல யார்? : பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே பயங்கர மோதல்: 7 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு; மக்கள் பீதி

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 7 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் வசந்த் என்ற கல்லூரி மாணவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது தொடர்பாக மொபைல் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

ரூட் தல யார் என்பதில் தொடரும் மோதல்

சென்னையில் மாணவர்களிடையே ஏற்பட்டு வரும் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் ரயில் மற்றும் பேருந்துகளில் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர். இதனால் மாணவர்களை கண்டு மக்கள் அச்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்டு வரும் மோதலும் அதிகரித்து வருகிறது. சென்னையில் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் என்பது தொடர்கதையாக உள்ளது. இரு கல்லூரி மாணவர்கள் இடையே பேருந்து, மற்றும் ரயிலில் ரூட் தல யார் என்பதில் மோதல் ஏற்பட்டு வருகிறது.

7 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு

இந்நிலையில் இன்று கல்லூரி முடிந்து பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த இரு தரப்பு மாணவர்கள் ஒரே பேருந்தில் கோயம்பேடு நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது ரூட் தல யார் என்பதில் இரு தரப்புக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. வாக்குவாதம் கைக்கலப்பாக மாறியதையடுத்து தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை சரமாரியாக தாக்கினர். ரவுடிகள் போல் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தை பார்த்து மற்ற மாணவர்கள் அலறி அடித்து ஓடினர்.

பேருந்தில் இருந்து வசந்த் என்ற கல்லூரி மாணவரை ஒரு தரப்பினர் கீழே இறக்கிவிட்டு சாலையில் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டியுள்ளனர். இதைப்பார்த்த சக பயணிகளும் பீதியில் அலறி அடித்து ஓடினர். இந்த  பயங்கர மோதலில் 7 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அரிவாள் வெட்டியதில் காயம் அடைந்த மாணவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆபத்தான நிலையில் இருக்கும் 2ம் ஆண்டு மாணவர் வசந்த்குமார் மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். ஆயுதங்களுடன் தப்பியோடிய மாணவர்களை பிடிக்க காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: