×

நாடாளுமன்ற கூட்டத்தொடர் மேலும் 10 நாட்கள் நீடிக்கப்படலாம் என பாஜக எம்பிக்கள் கூட்டத்தில் மோடி பேசியதாக தகவல்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை மேலும் 10 நாட்கள் நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியகியுள்ளது. நிலுவையில் உள்ள மசோதாக்களை நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது. இது தொடர்பாக, பாஜக எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி கூட்டத்தொடர் நீட்டிப்பு குறித்து பேசியகக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜூன்-17ம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடரில் இடைக்கால சபாநாயகர் எம்பி வீரேந்திரகுமார், புதிய எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து 19ம் தேதி புதிய சபாநாயகர் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில், காலாவதியான 46 சட்ட மசோதாக்கள் மீண்டும் தாக்கல் செய்ய முடிவெடுக்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தொடர் ஜூலை-26ம் தேதியோடு முடிவடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பல முக்கிய மசோதாக்களை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்ற மத்திய அரசுக்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதற்காக, இந்த கூட்டத்தொடர் நீடிக்கப்படலாம் என கடந்த ஒரு வாரக் காலமாகவே தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால், இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  இருப்பினும், இது தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை செய்து வந்தது.

இந்த நிலையில், இன்று காலை பாஜக கட்சி கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. அதில் பாஜக எம்பி-க்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்ற கூட்டத்தொடர் மேலும் 10 நாட்களுக்கு நீடிக்கப்படலாம் என தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடைபெற்று வரும் கூட்டத்தொடரிலேயே, நிலுவையில் உள்ள அனைத்து மசோதாக்களை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக உள்ளதாக கூறப்பட்டுளள்து. நடைபெற்று வரும் கூட்டத்தொடரில், பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. மேலும், வாடகை தாய் ஒழுங்கு முறை மசோதா,

அண்மையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய தேசிய மருத்துவ ஆணை மசோதா, அணை பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் இன்னும் விவாதமே நடத்தப்படாமல் உள்ளன. எனவே, இவற்றை முடிக்க வேண்டுமானால் அரசுக்கு கூடுதலாக கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, நாடாளுமன்ற கூட்டத்தொடர் 10 நாட்களுக்கு நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Tags : Parliamentary session, BJP MPs, Modi
× RELATED உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள்...