நாகை மற்றும் தஞ்சையில் ஆயிரக்காண விவசாயிகள் பேரணி: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட கோரிக்கை

நாகை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாகை மற்றும் தஞ்சையில் விவசாயிகள் பேரணி நடத்தி வருகின்றனர். ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என, தமிழக சட்டசபையில் அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதி அளித்திருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த திட்டத்தை கைவிடக்கோரி டெல்டாவில்  விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே பெரியக்குடி, சோழங்கநல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

Advertising
Advertising

இதனை கண்டித்து விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, நாகை மற்றும் தஞ்சையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். நாகையில், பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி இந்த பேரணி செல்கிறது. அதேபோல், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை செல்கிறது. சுமார் 2 கி.மீ தூரம் இந்த பேரணி நடைபெறுகிறது. இந்த பேரணியில் பங்கேற்றுள்ள விவசாயிகள், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இதற்கு நடப்பு சட்டமன்ற கூட்டத்திலேயே சட்டம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்து அரசாணை வெளியிட வேண்டும்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடுவோர் மீது பொய் வழக்குகளை போட்டு காவல்துறை ஒடுக்க முயல்கிறது. உடனடியாக வழக்குகளை திரும்ப பெற வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக டெல்டா மாவட்டங்களில் இறக்கி வைக்கப்பட்டுள்ள தளவாட பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். இதற்கிடையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்களும் களமிறங்கியுள்ளனர். தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் 500க்கு மேற்பட்டோர், வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தக்கூடாது என அவர்கள் வலியுறுத்தினர்.

Related Stories: