விஏஓவுக்கு தெரியாமல் புதைப்பு... தொழிலாளி சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

ஸ்ரீமுஷ்ணம்: கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே கானூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி (35). மாட்டுவண்டி தொழிலாளி. இவர் கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு மாட்டுவண்டி டயருக்கு காற்று பிடித்துள்ளார். அப்போது காற்றின் அளவு அதிகரித்து டயர் வெடித்து வீரமணி படுகாயம் அடைந்தார். சிதம்பரம் ராஜாமுத்தையா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் வீரமணி பரிதாபமாக இறந்தார். ஆனால் உறவினர்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்காமல் சடலத்தை இடுகாட்டில் புதைத்துவிட்டனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் கானூர் கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார் ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்தார். அதில் டயருக்கு காற்று நிரப்பிய கடை உரிமையாளர் மீதும், இறந்த வீரமணியின் அண்ணன் பாலசுப்பிரமணியம் மீதும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில் ஸ்ரீமுஷ்ணம் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் தாசில்தார் கண்ணன், துணை வட்டாட்சியர் அருள்பிரகாசம், வருவாய் ஆய்வாளர் கோவிந்தன், கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார் மற்றும் போலீசார், வருவாய்த்துறை அலுவலர்கள் முன்னிலையில் தொழிலாளி சடலத்தை தோண்டி எடுத்தனர். பின்னர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் சண்முகம், வெங்கடேசபிரசன்னா உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் அங்கு பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் சடலத்தை அதே இடத்தில் புதைத்துவிட்டு அனைவரும் சென்றுவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: