குறைந்த அழுத்த மின்விநியோகம் 7 கிராம மக்கள் சாலை மறியல்

தாராபுரம்: குறைந்த அழுத்த மின்விநியோகத்தால் மின்சாதன பொருட்கள் பழுதாகி வருவதோடு மாணவ, மாணவிகள் படிக்க முடியாத நிலை நீடிப்பதால் மின்வாரியத்தை கண்டித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் துணைமின் நிலையத்திலிருந்து மின்பாதை இணைப்புகளையும், மின் மாற்றியையும் மாற்றி அமைத்ததை கண்டித்தும், மின் பாதை மாற்றப்பட்டதால் குறைந்த மின்அழுத்தம் காரணமாக டிவி, பிரிஜ், ஏசி உள்ளிட்ட மின்சாதனங்களும் விவசாய மோட்டார் பம்புகள் பழுதாகி வருவதால் வேங்கிபாளையம், ஜோதியம்பட்டி, ஓடைக்கல்பாளையம், கொக்கம்பாளையம் உள்ளிட்ட 7 கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் நேற்று தாராபுரத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலைமறியல் குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது: குண்டடத்தில் 22 கே‌.வி. திறன் கொண்ட 2 மின் பாதை வழியாக வேங்கிபாளையம், இடையபட்டி, பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வந்த நிலையில், மின்வாரிய ஊழியர்கள் வேங்கி பாளையம் மின் வழிதடத்தில் இடையப்பட்டி மின் பாதையில் சென்றுகொண்டிருந்த மின்சாரத்தை மாற்றி வேங்கி பளையம் இதில் உள்ள 30 டிரான்ஸ்பார்மர்களுக்கு மின் இணைப்பை பிரித்து மாற்றியமைத்தனர்.இந்நிலையில் 1968ம் ஆண்டில் போடப்பட்ட பழைய மின் வழித்தடத்திலேயே இணைக்கப்பட்டதால், கடந்த நான்கு மாதங்களாக வீடுகளுக்கும், விவசாயத்திற்கும் மின்சாரம் சரிவர கிடைக்கவில்லை. அடிக்கடி குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டு மிக்சி, கிரைண்டர், பிரிஜ் போன்ற மின்சாதனங்கள் பழுதாகி வருகின்றன. இதுகுறித்து பலமுறை மனுக்கள் அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து சாலை மறியலில்ஈடுபட்டோம்.

தகவலறிந்து வந்த மின்வாரியத் துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சு நடத்தி தற்காலிகமாக வேங்கி பாளையம் இடையபட்டி ஆகிய மின் பாதைகளில் ஏற்கனவே மாற்றி அமைக்கப்பட்டிருந்த 30, டிரான்ஸ்பார்மர் வழித்தடத்தை மாற்றி வேங்கிப் பாளையத்திற்கு 15 டிரான்ஸ்பார்மர்களும் இடையபட்டிக்கு 15, டிரான்ஸ்பார்மர்களும், தற்காலிகமாக மாற்றி அமைத்து தருகிறோம். விரைவில் பழைய கம்பிகளை அகற்றிவிட்டு புதிய கம்பிகளை அமைத்து லோ வோல்டேஜ் பிரச்னையை சரி செய்து தருகிறோம் என வாக்குறுதி அளித்துள்ளனர் அதனடிப்படையில் மறியலை கைவிட்டு உள்ளோம். குறித்த காலத்திற்குள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், மிகப் பெரிய போராட்டங்கள் நடத்துவோம் எனக்கூறினார்.மறியல் காரணமாக கோவை, மதுரை, பழனி, தாராபுரம் செல்லும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: