நெல்லை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திறப்பு விழாவிற்கு தயாராகும் லாரி முனையம்

பேட்டை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நெல்லை பேட்டையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் லாரி முனையம் கட்டுமான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இதனால் நகர்புறத்தில் போக்குவரத்துக்கு நெரிசல் தவிர்க்கப்படுவதுடன் சரக்குகள் கையாளுதல், வேலை வாய்ப்பு மேம்பாடு அடையும். வளர்ந்த நாடுகளில் உள்ள ஸ்மார்ட் சிட்டி நகரங்களைபோல் நம் நாட்டிலும் நகரங்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த 2016 ஜூன் 25ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு, கல்வி, வணிகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புலம்பெயரும் மக்களால் நகரங்களின் விரிவாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்றாற்போல் நகர்புறங்களில் அடிப்படை வசதிகள், கூட்ட நெரிசல், போக்குவரத்து நெரிசல் மற்றும் சுகாதார நிலைகள் கேள்விக்குறியாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் தொலைநோக்கு திட்டத்துடன் உருவாக்கப்பட்ட ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தால் நகர்ப்புறத்தில் சுத்தமான குடிநீர், மின்விநியோகம், தரமான சாலை போக்குவரத்து, கணினிமயமாக்கப்பட்ட சேவை, பொழுதுபோக்கு பூங்காக்கள், பஸ் நிலையம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதால் பொருளாதாரம் மேம்பாடு அடைவதுடன் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய நகரமாக விளங்கும்.

நாடு முழுவதும் 2022ம் ஆண்டுக்குள் 100 ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பல்வேறு நகரங்களில் பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட 12 நகரங்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. நெல்லையில் இத்திட்டத்தின் கீழ் சந்திப்பு பஸ் நிலையம் இடிக்கப்பட்டு நவீனமயமாக கட்டப்பபட்டு வருகிறது. மேலும் பழையபேட்டையில் லாரி முனைய பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. இம்முனையமானது பேட்டை - பழையபேட்டை இணைப்பு சாலையில் நவீன ஆடறுப்பு மையம் அருகே குப்பை கிடங்கு அமைந்த பகுதியில் கட்டப்பட்டு வருகிறது. ரூ.14 கோடி திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் இம்முனையத்தில் ஒரே நேரத்தில் நூறு லாரிகள் நிறுத்துவதற்கு வசதியாக கட்டப்பட்டு உள்ளது.

இங்கு லாரி டிரைவர்கள் ஓய்வெடுக்க வசதியாக காற்றோட்ட வசதியுடன் கூடிய இருபது அறைகள், குளியலறை, கழிப்பிட வசதி, உணவகம், 3 உயர்கோபுர மின்விளக்கு வசதி, கண்காணிப்பு கேமரா, 24 மணி நேர பாதுகாப்புடன் கூடிய புறக்காவல் நிலையம் என அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் ஒருங்கே அமைந்துள்ளது. இதனால் வாகனங்கள் முழுமையாக பாதுகாக்கப்படுவதுடன் நகர்ப்புற போக்குவரத்து நெருக்கடி குறைய வாய்ப்புள்ளது. சரக்குகள் கையாளும் வசதிகள் உள்ளதால், ஏராளமானோருக்கு மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. மும்முரமாக நடந்து வந்த லாரி முனையத்தின் பணிகள், தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இன்னும் ஒரு மாதத்தில் திறப்பு விழாவிற்கு தயார்படுத்தும் வகையில், பணிகள் அனைத்தும் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. இந்த லாரி முனையம் திறக்கப்பட்டால், நெல்லை மாநகரின் மேற்கு பகுதிகளான பேட்டை, பழையபேட்டை பகுதிகள் பெரும் வளர்ச்சி பெறும்.

Related Stories: