கிடங்கில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற இயந்திரம் அமைக்கும் பணி தீவிரம்

ஈரோடு: ஈரோடு அருகே வெண்டிபாளையம், வைராபாளையம் குப்பை கிடங்கில் குவிந்து கிடக்கும் குப்பைகளை தரம் பிரித்து அகற்ற ரூ.37.25 கோடி மதிப்பீட்டில் ராட்சத சல்லடை இயந்திரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஈரோடு மாநகராட்சி பகுதி 60 வார்டுகளை கொண்டுள்ளது. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் வைராபாளையத்தில் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள கிடங்கிலும் வெண்டிபாளையம் குப்பை கிடங்கிலும் கொட்டப்படுகிறது. இதில், வைராபாளையம் குப்பை கிடங்கு 19 ஏக்கர் பரப்பளவிலும், வெண்டிபாளையம் குப்பை கிடங்கு 7 ஏக்கர் பரப்பளவிலும் உள்ளது. இந்த 2 குப்பை கிடங்குகளிலும் சேகரிக்கப்பட்ட குப்பைகள் மலைபோல குவிந்து கிடக்கிறது. இதை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தும் நாளுக்கு நாள் அதிகமான குப்பைகள் சேகரமாகி வருகிறது. கிடங்குகளில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் தற்போது வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை 5 அல்லது 6 வார்டுக்கு ஒரு மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் துவங்கப்பட்டு அந்தந்த பகுதியிலேயே குப்பைகளை தரம் பிரிக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக, மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் அமைக்கும் பணி ஒருபுறம் நடந்து வரும் நிலையில் வைராபாளையம், வெண்டிபாளையம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் குப்பைகளை அகற்ற ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ்.37.25 கோடியில் ராட்சத சல்லடை இயந்திரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை 90 சதவீத பணி முடிந்துள்ளது. அடுத்த வாரத்தில் இருந்து குப்பை பிரிக்கும் பணி துவங்குகிறது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது: மாநகராட்சிக்கு சொந்தமான 2 குப்பை கிடங்குகளிலும் 5 லட்சம் கனமீட்டர் குப்பை சேர்ந்துள்ளது. இதனால், சுகாதார கேடு ஏற்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து குப்பையை அகற்ற ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ராட்சத சல்லடை இயந்திரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது குவிந்து கிடக்கும் குப்பைகளை சல்லடை இயந்திரம் மூலம் மண், கல், பிளாஸ்டிக் கழிவு, துணிகழிவு, இரும்பு பொருட்கள் என பலவகையாக தரம் பிரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக், துணி கழிவுகளை உருக்கி சிமென்ட் ஆலைகளுக்கு எரிபொருளாக அனுப்பப்படும். இரும்பு பொருட்கள், கண்ணாடி பொருட்களை விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். மண் கழிவுகளை மாநகராட்சி பகுதியில் சாலை அமைக்கும் பணிக்கு பயன்படுத்தப்படும். குப்பை அகற்றும் பணி 2 ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு குப்பை மேடு சுத்தமாகி விடும். இனிவரும் காலங்களில் குப்பை இல்லாத பகுதியாக ஈரோடு மாநகராட்சி விளங்கும். இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

Related Stories: