காரைக்கால்-திருச்சி ரயில் பாதையில் மின்மயமாக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

நாகை: காரைக்கால்-திருச்சி இடையே ரயில் பாதை மின் மயமாக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர். திருச்சி காரைக்கால் இடையே ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருச்சியில் இருந்து தஞ்சை வரை ஒரு கட்டமாகவும், தஞ்சையில் இருந்து காரைக்கால் வரை மற்றொரு கட்டமாகவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக திருச்சி பொன்மலையில் இருந்து ஆலக்குடி வரையும், பின்னர் ஆலக்குடியில் இருந்து தஞ்சை வரையும் ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்து பல மாதங்கள் ஆகியுள்ள நிலையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் கடந்த மாதம் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது மின்பாதைகள், ரயில்வே பாலங்கள், சிக்னல்கள் உள்ளிட்ட அனைத்தும் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததாக அதிகாரிகள் அறிவித்தனர். முதலில் சரக்கு ரயிலில் மின்சார இன்ஜின் பொருத்தி இயக்கப்படும். அதன்பின் பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இவ்வாறு முதல் கட்டமாக திருச்சியில் இருந்து தஞ்சை வரை ரயில்பாதை மின்மயமாக்குதல் நிறைவு பெற்றது. இதையடுத்து இரண்டாம் கட்டமாக தஞ்சையில் இருந்து காரைக்கால் வரை மின்மயமாக்கும் பணி தொடங்கப்பட்டது. இதில் நாகை அருகே சிக்கல் வரை மட்டுமே மின் கம்பிகள் நடப்பட்டுள்ளது. அதன் பின்னர் மின்கம்பிகள் இன்னும் நடப்படவில்லை. இதனால் தஞ்சையில் இருந்து காரைக்கால் வரை மின்மயமாக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் ஆவலுடன் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ரயில் பயணிகள் கூறியதாவது: நாகையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்வதற்கு ரயில் சேவை என்பது கிடையவே கிடையாது. நாகையில் இருந்து திருச்சி சென்ற பின்னர் அங்கிருந்து தான் ரயிலில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. நாகையில் இருந்து திருச்சி செல்வதற்கு ரயில்கள் எண்ணிக்கையும் குறைவு. இதனால் நாகையில் இருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் ரயில் சேவை தொடங்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து பலன் இல்லை. இதற்கு இடையே திருச்சியில் இருந்து காரைக்கால் வரை ரயில் பாதையை மின்மயமாக்கும் பணி தொடங்கி பல ஆண்டுகள் ஆகியும் பணி நிறைவு பெறவில்லை. திருச்சி பொன்மலையில் இருந்து தஞ்சை வரை பணி நிறைவுபெற்று சோதனை ஓட்டம் நிறைவு பெற்றுள்ளது. ஆனால் தஞ்சையில் இருந்து காரைக்கால் வரை மின்மயமாக்கும் பணியில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.

காரைக்காலில் இருந்து நாகை வழியாக அடிக்கடி சரக்கு ரயில்கள் செல்கிறது. மின்சார ரயில்கள் இயக்கினால் சரக்கு ரயில்கள் வேகமாக செல்லும். இதனால் தஞ்சையில் இருந்து நாகை வரை பல மணி நேரம் பூட்டி கிடக்கும் ரயில்வே கேட்டுகளில் இருந்து பஸ்சில் வரும் பயணிகள் தப்பிக்க முடியும். தஞ்சையில் இருந்து நாகை வருவதற்குள் 8 ரயில்வே கேட்டுகளை கடந்து வரவேண்டிய நிலை உள்ளது. ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு எவ்வித வசதியும் தற்பொழுது அமையாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ரயில்பாதையை மின்மயமாக்கினால் ரயில்கள் செல்லும் நேரத்தை குறைக்கலாம். அவ்வாறு ரயில்கள் செல்லும் நேரம் குறைந்தால் பஸ்சில் வரும் பயணிகள் பல மணி நேரம் காத்திருக்கும் அவலநிலை ஓரளவு குறையும். எனவே தஞ்சையில் இருந்து காரைக்கால் வரையில் ரயில்பாதையை மின்மயமாக்கும் பணியை விரைந்து முடிப்பதுடன் மின்சார ரயில்களின் சேவையை விரைவாக தொடங்க வேண்டும் என்று ரயில் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: