டாஸ்மாக் இல்லாத ராமேஸ்வரத்தில் தெருவுக்கு தெரு மது விற்பனை

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் வேர்கோடு பகுதியை சேர்ந்த பெண்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில், ‘ராமேஸ்வரத்தில் மதுக்கடைகள் இல்லாத நிலையில், நகரில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் போலி மதுபானம் விற்பனை செய்கின்றனர். தெருவுக்கு தெரு போலி மது விற்பனை இரவு பகலாக நடக்கிறது. இதுகுறித்து ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் மனு கொடுத்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலி மது விற்பனையை தடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என மனு அளித்துள்ளனர்.

மனு அளிக்க வந்த முத்துமாரி கூறுகையில், ராமேஸ்வரத்தில் எல்லா இடத்திலும் மது விற்கின்றனர். கடலுக்கு செல்லும் ஆண்கள் வீட்டிற்கு வரும் போது குடித்து விட்டே வருகின்றனர். குடும்ப செலவிற்காக பணம் கேட்டால் இல்லை என்கின்றனர். போதையில் எங்களை அடிக்கின்றனர். குழந்தைகள் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிறது. அரசு மதுக்கடை இல்லாத நிலையில், ராமேஸ்வரத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்ட பெட்டிக்கடைகளில் 24 மணி நேரமும் மது விற்பனை நடக்கிறது. தெருவில் ஏன் விற்கிறாய் என கேட்டால் உன் வேலையை பார் என மிரட்டுகின்றனர். கலெக்டர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: