குறிஞ்சிப்பாடி அருகே அரசு விடுதி மாணவர்களுக்கு தரமற்ற உணவு

நெய்வேலி: குறிஞ்சிப்பாடி அருகே அரசு விடுதி மாணவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். குறிஞ்சிப்பாடியை அடுத்த வெங்கடாம்பேட்டை சந்தைதோப்பு எதிரே அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தபள்ளியில் பயிலும் மாணவர்கள் பள்ளி வளாகத்தின் அருகே உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். இங்கு சுமார் 65க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளனர். இந்த மாணவர்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர், உணவு, கழிப்பிட வசதி உட்பட எந்த வசதிகளும் இல்லாததால் மாணவர்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்த விடுதியில் உள்ள மாணவர்களுக்கு அன்றாட உணவு வகைகளை பட்டியலிட்டு அது தயார் செய்து கொடுப்பதில்லை. மாணவர்கள் குடிக்க சுத்தமான தண்ணீர் வசதிகள் கூட விடுதி வார்டன் செய்து தர மறுப்பதாக கூறப்படுகிறது. மாணவர்களுக்கு கழிப்பறை வசதி இல்லாததால் அவர்கள் காட்டு பகுதியில் சென்று இரவு நேரங்களில் வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருக்கின்றது.

மேலும் இங்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்றதாக இருக்கின்றது. வாரம் ஒரு முறை கூட அசைவ உணவுகளை வழங்குவதில்லை. இங்கு பணிபுரியும் விடுதி வார்டன் அரசு வழங்கி உள்ள மாதம் ஒரு முறை வழங்கப்படும் சோப்பு, எண்ணெய் போன்றவற்றையும் தர மறுக்கிறார். மீறி கேட்டால் மாணவர்களை விடுதியில் இருந்து நீக்கி விடுவேன் என மிரட்டுகிறார். மதியம் சமைத்த உணவை இரவில் சாப்பிட கொடுக்கிறார்கள். விடுதி முழுவதும் சுகாதாரம் இல்லாமல் மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. இங்கு பணிபுரியும் விடுதி வார்டன் இங்கு பணிக்கு வருவதே இல்லை. எனவே மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு தேவையான உணவுகள், சுகாதாரமான விடுதி உள்ளடக்கிய வசதிகளை சரி செய்து கொடுக்க வேண்டும். மாணவர்கள் இது குறித்து பல முறை புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை. மேலும் விடுதியில் உள்ள ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து அதன் வழியாக மழைநீர் உள்ளே வருவதால் மாணவர்கள் விடுதியில் தங்காமல் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும், பிற்படுத்தப்பட்ட நல அலுவலரும் மாணவர்களை வந்து சந்தித்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க வேண்டும் மேலும் விடுதிக்கு வராத வார்டன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: