மத்திய தகவல் ஆணையத்தை மத்திய அரசு இடையூறாக பார்க்கிறது: சோனியா காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: தற்போதைய ஆர்டிஐ-யை மத்திய அரசு இடையூறாக பார்ப்பதால் அதன் சுதந்திரத்தை பறிக்க முயற்சி செய்வதாக சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஆர்டிஐ திருத்த மசோதா மக்களவையில் நேற்று  நிறைவேற்றப்பட்டுள்ளது. பொது மக்கள் தகவல் அறிய கொண்டுவரப்பட்ட சட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ). இந்தச் சட்ட மசோதா கடந்த 2005-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி மத்திய தகவல் ஆணையரின் பதவிக் காலம், ஊதியம் உள்ளிட்டவை தொடர்பாக திருத்தம் கொண்டுவருவதற்கான மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதா மீதான விவாதத்தின் போது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஆர்டிஐ மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து இந்த சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவைக்கு அனுப்பப்படவுள்ளது.

மாநிலங்களவையில் மத்திய அரசின் பலம் அதிகம் இல்லாததால், இந்த மசோதா நிறைவேறுவது சற்று கடினமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மக்களவையில், இந்த சட்ட திருத்த மசோதா நிறைவற்றப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தற்போதைய ஆர்டிஐ-யை மத்திய அரசு இடையூறாக பார்க்கிறது. எனவே தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய கண்காணிப்பு ஆணையத்திற்கு நிகராக உள்ள மத்திய தகவல் ஆணையத்தின் சுதந்திரத்தை பறிக்க அரசு முயற்சி செய்கிறது என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மக்களவையில் உள்ள பெரும்பான்மை மூலம் தனது நோக்கத்தை மத்திய அரசு நிறைவேற்றிக் கொள்வதாக தெரிவித்துள்ளார். ஆனால் அது நாட்டில் உள்ள ஒவ்வொரு மக்களின் உரிமையை பறிக்கும் விதமாக உள்ளது என்றும் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories: