காடையாம்பட்டியில் ஆங்கில மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது

காடையாம்பட்டி: சேலம் காடையாம்பட்டியில் 10ம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். இவர், 4வது முறையாக சிக்கியுள்ளார். சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கந்தன் மகன் முருகேசன்(51) என்பவர், 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு தன்னை டாக்டர் என கூறிக்கொண்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். மேலும், சந்தைப்பேட்டை பகுதியில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து கிளினிக் நடத்தி வந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், ஏற்கனவே 3 முறை கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றுள்ளார். இதையடுத்து, நீண்ட நாள் ஜாமீனில் வெளி வந்த அவர் மீண்டும் மருந்து- மாத்திரை கொடுத்தும், ஊசி போட்டும் சிகிச்சையளித்து வருவதாக புகார் எழுந்தது.

இதன்பேரில், நேற்றிரவு 10 மணியவில் அவரது கிளினிக்கில் மருந்து ஆய்வு குழு டிஎஸ்பி தாமதஸ் மற்றும் ஓமலூர் மருத்துவர் குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மருத்துவ அலுவலர் சத்யா, காடையாம்பட்டி தாசில்தார் மகேஸ்வரி முன்னிலையில் இந்த சோதனை நடைபெற்றது. இதில், உரிய அனுமதியின்றி முருகேசன் மருத்துவம் பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர். மேலும், அங்கிருந்த மருந்து - மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: