மூட்டை தூக்கும் தொழிலாளர் பசியாற்றும் ‘போலீஸ் கேன்டீன்’... லாபத்தை விட சேவையே முக்கியம்

சேலம்: சேலத்தில் தெருவுக்கு தெரு தரமான ஓட்டல்கடை, தள்ளுவண்டி கடைகள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும், நெத்திமேட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளர்களுக்கு போலீஸ் கேன்டீன் ஒன்று பசி தீர்க்கும் இடமாக மாறியுள்ளது. சேலம் மாவட்ட எஸ்.பி. அலுவலகம் நெத்திமேட்டில் செயல்பட்டு வருகிறது. இங்கு 75க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதிலும் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மனுக்கள் கொடுக்க வருகிறார்கள். இவர்களுக்காகவும், பணிநேரத்தில் ஊழியர்கள் டீ குடிப்பதற்காக வெளியே செல்லாமல் பணியாற்றும் வகையிலும், அலுவலக வளாகத்திலேயே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் கேன்டீன் திறக்கப்பட்டது. ஆரம்ப காலக்கட்டத்தில் தினமும் 300 ரூபாய் லாபம் ஈட்டி வந்த இந்த போலீஸ் கேன்டீன், தற்போது ரூ.1500 லாபம் ஈட்டிவருவது கேன்டீன் நடத்தும் போலீசாரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காலை நேரத்தில் இட்லி, தோசை, ஆம்லெட், பூரி போன்றவை குறைந்த விலையில் வழங்கினாலும், மதிய சாப்பாடு தான் சக்கை போடுபோடுகிறது. எல்லா இடங்களை போல சாப்பாடு ஒன்று ரூ.40 தான் என்றாலும், வீட்டு சாப்பாடு போலவே இருப்பதால் சாப்பிடுவோரும் மகிழ்ச்சியுடன் சாப்பிட்டு செல்கிறார்கள். தட்டில் வாழை இலை வைத்து சாப்பாடு வழங்கப்படுகிறது. சாம்பார், மோர், ரசம், ஏதாவது ஒரு பொரியல் மற்றும் அப்பளம் வழங்கப்படுகிறது. கூடுதல் சாப்பாடும் இலவசமாக வழங்கப்படுவது கூடுதல் சிறப்பாகும்.

இந்த கேன்டீனில் போலீசார் வந்து சாப்பிடுவதை காட்டிலும், நெத்திமேடு பகுதியில் உள்ள மூட்டை தூக்கும் தொழிலாளர்களுக்கு இந்த கேன்டீன் வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. கூடுதல் சாப்பாடு கேட்டாலும் அங்குள்ள போலீசார் முகம் சுழிக்காமல் வழங்குகிறார்கள். தினமும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் வருகின்றனர். புதன்கிழமை ரூ.60 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படுகிறது. ரூ.20 ரூபாய்க்கு மீன் துண்டும் இங்குள்ளது. அதே போல தக்காளி, தயிர், எலுமிச்சை, புளி சாதம் ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீ, காபி மற்றும் குளிர்பானங்களும் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. போலீஸ் கேன்டீன் என்ற பயம் இல்லாமல் பொதுமக்கள் இங்கு வந்து பயன்பெறுவது மகிழ்ச்சியளிப்பதாக போலீசார் தெரிவித்தனர். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தரமான அரிசியில் சுகாதாரமான முறையில் உணவு வழங்கப்படுகிறது என்றாலும் இந்த கேன்டீனில் அதிகாரிகள் சாப்பிடுகிறார்களா? என்ற கேள்வி அனைவருக்கும் எழும். அதனை உறுதி செய்யும் வகையில், மாவட்ட எஸ்.பி. தீபா கனிக்கர் மாதம் ஒரு நாளாவது இந்த கேன்டீனில் சாப்பிடுகிறார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘போலீஸ் கேன்டீன் மூலம் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கமல்ல. பொதுமக்கள் திருப்தியாக சாப்பிடும் வகையில் இந்த கேன்டீன் நடத்தப்படுகிறது. விரைவில் ஆவின் பாலகமும் அமைக்கப்படுகிறது,’ என்றனர்.

Related Stories: