நவீன டெர்மினல் பாதிக்கு மேல் வெறிச்சோடுகிறது... தூங்கா நகரில் 24 மணி நேர விமான சேவை எப்போது?

மதுரை: ஆன்மீக சுற்றுலா வளர்ச்சிக்கு தூங்கா நகரில் 24 மணி நேர விமான சேவை எப்போது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புராதன சிறப்பு மிகுந்த 63 நகரங்களில் மதுரை முக்கிய இடம் பெறுகிறது. கோவில் மாநகரமாக புகழப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோயில், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான கள்ளழகர் திருக்கோயில். புண்ணியஸ்தலமான ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. சமீபகாலமாக வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் முருக கடவுளின் அறுபடை வீடுகளுக்கு சென்று தரிசிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். ஆறில் முதல்படைவீடு திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூர், அழகர்மலையில் சோலைமுருகன் ஆகிய 4 படைவீடுகள் மதுரையை சுற்றி அமைந்துள்ளது. அம்மாதிரி ஆன்மீக சுற்றுலாவுக்கு குழுவாக வருவோர் மதுரைக்கு வந்து செல்வதற்கு விமான போக்குவரத்தை அதிகம் நாடுகிறார்கள்.

ஆனால் அதற்கு ஏற்ற அளவுக்கு மதுரை விமான நிலையத்திற்கு விமான போக்குவரத்து இல்லை என்பது பெரிய குறைபாடாகும். மதுரை சர்வதேச விமான நிலைய அந்தஸ்துக்கு எட்டவில்லை. ஆனால் பன்னாட்டு விமானங்கள் இயக்குவதற்கு ஏற்ற வகையில் ரூ.130 கோடியில் நவீன டெர்மினல் அமைக்கப்பட்டு 9 ஆண்டுகளாகிறது. இதுவரை சென்னை. பெங்களூரு மற்றும் இலங்கை, சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளுக்கு மட்டுமே விமானங்கள் பறக்கின்றன. மலேசியா, தாய்லாந்து, ஷார்ஜா, அபதாபி போன்ற பல்வேறு நாடுகள் மதுரைக்கு விமானங்கள் இயக்க தயாராக இருக்கின்றன. ஆனால் அந்த நாட்டு விமானங்கள் மதுரைக்கு வந்து செல்லும் ஒப்பந்தம் செய்து அனுமதி அளிப்பதில் மத்திய அரசு புறக்கணிப்பதாக புகார் எழுந்துள்ளது. மதுரையை விட சிறிய நகரங்கள் அந்த அனுமதியை பெற்று உயர பறக்கின்றன. மதுரை மட்டும் தாழ்கிறது. இந்த அனுமதி கிடைத்தால், தூங்கா நகரமாக கருப்படும் மதுரை விமான நிலையம் சென்னையை போல் 24 மணி நேரமும் இயங்க வாய்ப்பு கைகூடும். பல்வேறு நாடுகளின் விமான போக்குவரத்து அதிகரித்தால், ஆன்மீக சுற்றுலா வளர்ச்சி ஏற்படும் என கருதப்படுகிறது. 24 மணி நேர விமான சேவையின் மூலம் விமான நிலையம் முதல் மதுரை நகரம் வரை வளர்ச்சி பெற்று பொருளாதார ரீதியாகவும் மேம்பாடு அடையும்.

சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “வாரத்துக்கு 100 விமானங்கள் இயக்கப்பட்ட திருச்சியில் தற்போது 150க்கும் மேற்பட்ட விமானங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக வெளிநாட்டு விமான சேவை அதிகரித்துள்ளன. இருநாட்டு விமான சேவையில் மதுரையை சேர்க்காமல் மத்திய அரசு புறக்கணிப்பதால் மதுரைக்கு விமான சேவை குறைகிறது. பன்னாட்டு விமானங்கள் அனுமதிக்கப்பட்டால் மதுரை விமான நிலையம் 24 மணி நேரம் இயங்கி பிசியாகிவிடும். இந்த வசதி இல்லாமல் தொழில் வளர்ச்சிக்கு தடங்கல் ஏற்படுகிறது. ஆன்மீக ரீதியான சுற்றுலா வளர்ச்சிக்கு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. சர்வதேச விமான நிலையம் அமையும் வரை காத்திருக்காமல் பல்வேறு நாட்டு விமான போக்குவரத்துக்கு வாய்ப்பு இருந்தும் அனுமதி மறுப்பது ஏன்? என்பது மர்மமாக உள்ளது. தமிழக அரசின் குரலும், பாராளுமன்றத்தில் குரலும் சேர்ந்து ஒலித்தால் மத்திய அரசு செவிசாய்க்கும்” என்றனர்.

மல்லிகை பூ ஏற்றுமதி

* மணக்கும் மதுரை மல்லிகை பூ புவிசார் குறியீடு பெற்றுள்ளது. ஆனால் மல்லிகை பூ உற்பத்தி விவசாயிகளின் வாழ்வு மணக்கவில்லை. ஏனென்றால் விவசாயிகளுக்கு கட்டுபடியாகும் விலை கிடைக்காமல் வாடுகிறார்கள். மதுரை மல்லிகையை விரும்பும் முக்கிய நகரங்கள், பல்வேறு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதிக்கு வாய்ப்பு இருந்தும் விமானங்கள் இல்லை. 24 மணி நேர விமான சேவை எட்டினால் மல்லிகை விவசாயிகள் வாழ்வு மணக்க வழி ஏற்படும்.

Related Stories: