விவசாயி கிணற்றில் பாம்புகள் தஞ்சம்... கடலூர் அருகே பரபரப்பு

கடலூர்: கடலூர் அருகே குட்டியாங்குப்பம் கிராமத்தில் விவசாயி வீட்டின் கிணற்றில் கடந்த 15 நாட்களாக பாம்புகள் முகாமிட்டிருந்தது கிராம மக்களை பீதிக்கு உள்ளாக்கியது. கடலூரை அடுத்த குட்டியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சீதாராமன். விவசாயி. இவரது வீட்டுக்கு பின்புறம் தண்ணீர் பயன்பாட்டிற்காக கிணறு ஒன்று அமைத்து இருந்தார். பழமையான அந்த கிணற்றில் தற்போது தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இந்நிலையில் குடிநீர் பற்றாக்குறை காரணமாக குட்டியாங்குப்பம் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதி மக்கள் தண்ணீருக்காக அலையும் நிலையும் ஏற்பட்டு வந்ததால் சீதா ராமன் தனது கிணற்றை தூர் வாரி ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் எடுக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

அப்போது கிணற்றிலிருந்து பாம்புகள் சீறும் சத்தம் கேட்டுள்ளது. பல நாட்களாக தண்ணீர் இல்லாமல் வறண்ட கிணற்றில் பாம்புகள் முகாமிட்டு இருக்கலாம் என அஞ்சிய கிராம மக்கள் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என முடிவு செய்தனர். இதற்காக சில இளைஞர்கள் கிணற்றில் இறங்கலாம் என முடிவு செய்த நிலையில் கிணற்றிலிருந்து பல பாம்புகள் கிராம மக்களின் ஓசையை கேட்டதும் கிணற்றில் இருந்து சீறிப் பாய்ந்தது. அதைக் கண்டு அஞ்சி நடுங்கி ஓட்டம் பிடித்தனர். சுமார் பத்துக்கும் மேற்பட்ட பாம்புகள் கிணற்றுக்குள் முகாமிட்டு இருப்பதைக் கண்ட சீதாராமன் மற்றும் கிராம மக்கள் இதனால் பீதிக்கு உள்ளாகினர்.

இதற்கிடையே தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு உடனடியாக பாம்புகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி வெளியேற்ற வேண்டுமென முடிவு செய்த கிராம மக்கள் வனத்துறை மற்றும் பாம்பு பிடிக்கும் ஆர்வலர் செல்லாவுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடிக்கும் குழுவினர் பாம்புகளை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். 40அடி ஆழ கிணற்றுக்குள் பாம்பு படைகள் சீறிப்பாய்ந்து ஓசை எழுப்பிய நிலையில் அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக செல்லா கயிற்றின் மூலம் பிடித்து கிணற்றிலிருந்து தரைப்பகுதிக்கு கொண்டு வந்தார். பின்னர் அவற்றை பாட்டில்களில் அடைத்து நான்கு நல்ல பாம்பு உள்ளிட்ட 13 பாம்புகளை காப்புக் காட்டில் கொண்டு சென்று விடுவித்தார்.

Related Stories: