ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மெக்கானிக் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள அத்தாணி அருகே ஓடை மேடு பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவரது மகன் வல்லரசு என்ற பிரகாஷ் (35).பைக் மெக்கானிக். இவர், கடந்த 20 ஆண்டாக அத்தாணி பேரூராட்சிக்கு சொந்தமான கடையில் மெக்கானிக் ஒர்க் ஷாப் நடத்தி வந்தார். கடந்த 3 மாதத்துக்கு முன்பு இக்கடையை பேரூராட்சி நிர்வாகம் ஏலம் விட்டது. ஏலத்தில், பெருமாபாளையத்தை சேர்ந்த சேகர் என்பவர் கலந்து கொண்டு ஏலம் எடுத்தார். அவர், உடனடியாக கடையை காலி செய்யும்படி பிரகாஷிடம் கூறி உள்ளார். ஆனால், பிரகாஷ் கடையை காலி செய்யாமல் இருந்ததால் கடந்த 12ம் தேதி சேகர் கடையில் இருந்த பொருட்களை எடுத்து வெளியே போட்டார். இதுகுறித்து பிரகாஷ் அளித்த புகாரின்பேரில் ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

ஏலத்தை ரத்து செய்துவிட்டு தனக்கே மீண்டும் கடையை வழங்க வேண்டும் எனக்கூறி நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக பிரகாஷ் வந்தார். அப்போது, திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை திறந்து தனது உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீ குளிக்க முயன்றார்.அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பிரகாஷை தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை ஈரோடு தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி தீ குளிக்க முயன்ற சம்பவம் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: