கணவரை கைது செய்யக்கோரி கலெக்டர் கார் முன்பு கர்ப்பிணி பெண் தர்ணா

மதுரை: கொடுமைப்படுத்தும் கணவரை கைது செய்யக்கோரி கலெக்டர் கார் முன் கர்ப்பிணி தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை ஒத்தக்கடை அருகே மலைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் சத்யமூர்த்தி. இவர் கடந்தாண்டு அதே பகுதியை சேர்ந்த முத்துமாரி மகள் ஜூலீஸ்வரியை (23) காதலித்து திருமணம் செய்தார். ஜூலீஸ்வரி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. வளைகாப்பு முடிந்து தாய் வீட்டில் ஜூலீஸ்வரி இருந்தபோது, கடந்த 18ம் தேதி, சத்யமூர்த்தி குடித்து விட்டு தகராறு செய்து, வீட்டுக்கதவை உடைத்துள்ளார்.

மேலும் அரிவாளால் வெட்டியதில் மாமியார் முத்துமாரி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுதொடர்பாக புகார் அளித்தும், ஒத்தக்கடை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத்தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த ஜூலீஸ்வரி, தாய் முத்துமாரி மற்றும் குடும்பத்தினருடன், நேற்று மதுரை கலெக்டர் அலுவலகம் வந்தார். அங்கு நிறுத்தி இருந்த கலெக்டர் கார் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தன்னையும், தாயையும் அடித்து துன்புறுத்தும் கணவர் சத்யமூர்த்தியை கைது செய்ய வேண்டும். புகாரளித்தும் கண்டுகொள்ளாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் புகார் மனுவை கலெக்டர் ராஜசேகரிடம் கொடுத்தனர். மனுவின் மீது மேல் நடவடிக்கை எடுக்க எஸ்பிக்கு கலெக்டர் பரிந்துரை செய்தார்.

Related Stories: