அமர்நாத் யாத்திரை மேற்கொள்வோருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதால் ஆக்சிஜன் வழங்கி வரும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவலர்கள்!

ஸ்ரீநகர்: அமர்நாத் யாத்திரை மேற்கொள்வோரில் சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதால் இந்தோ திபெத்திய எல்லைக் காவலர்கள் ஆக்சிஜன் வழங்கி வருகின்றனர். தெற்கு காஷ்மீரில் உள்ள இமயமலையில் அமர்நாத் குகைக் கோயில் அமைந்துள்ளது. இதில் உள்ள பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான யாத்திரை கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 15 வரை 46 நாட்கள் அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் பகல்காம், கந்தர்பால் மாவட்டத்தின் பல்தால் மலைப்பாதைகள் வழியாக பக்தர்கள் யாத்திரை செல்கின்றனர். கடந்த 22 நாட்களில் 2,85,381 பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசித்துள்ளனர். இதற்கிடையில், யாத்திரைக்கு வந்த இடத்தில் உடல்நலக்குறைவு மற்றும் மிக உயரமான மலைப்பகுதியில் பிராணவாயு பற்றாக்குறை, நிலச்சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அமர்நாத் யாத்திரை சென்றவர்களில் அடுத்தடுத்து 18 பேர் உயிரிழந்திருந்தனர்.

இவர்களின் இருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், மேலும் இருவர் யாத்ரீகர்களுக்கு உதவி செய்யும் தன்னார்வலர்களாக சேவை செய்தவர்கள் என்பது தெரியவந்தது. இந்நிலையில், மேலும் 6 பக்தர்கள் உயிரிழந்ததால் இந்த ஆண்டு யாத்திரை காலத்து பலி எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 24 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 22 பேர் இயற்கையாக மரணமடைந்த நிலையில், 2 பேர் விபத்து காரணமாக உயிரிழந்தனர். இத்தகைய உயிரிழப்புகளை தடுப்பதற்காக, 3,888 மீட்டர் உயரத்தில் உள்ள குகைக்கு செல்லும் யாத்ரீகர்களுக்குத் தேவையான உதவிகளை இந்தோ திபெத்திய எல்லைக் காவலர்கள் வழங்கி வருகின்றனர். அந்த வகையில், மலை ஏற்றத்தின்போது மூச்சுத்திணறல் ஏற்படும் முதியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு சிலிண்டர், மாஸ்க் மூலம் ஆக்சிஜன் வழங்கி வருகின்றனர். பட்லால் பாதையில் மட்டும் 161 யாத்ரீகர்களுக்கு ஆக்சிஜன் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: