காஷ்மீர் விவகாரத்தில் சர்ச்சை கருத்து கூறிய அதிபர் டிரம்ப்: இந்திய தூதரிடம் மன்னிப்பு கோரினார் அமெரிக்க எம்.பி!

புதுடெல்லி: காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக டிரம்ப் தெரிவித்த கருத்துக்காக அமெரிக்க எம்.பி. மன்னிப்பு கோரியுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமெரிக்க அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்யும்படி இந்திய பிரதமர் மோடி கேட்டதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இரண்டு வாரங்களுக்கு முன் ஜப்பானில் இந்திய பிரதமர் மோடியை சந்தித்தபோது காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய விருப்பமா? என்று கேட்டார். அப்போது இந்தியாவும் பாகிஸ்தானும் கேட்டுக்கொண்டால் மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளதாக கூறினேன், என டிரம்ப் குறிப்பிட்டார். ஆனால் அப்படி எந்த கோரிக்கையையும் டிரம்பிடம் பிரதமர் மோடி வைக்கவில்லை என இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார், அமெரிக்க அதிபர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியை பார்த்தேன். இந்தியாவும் பாகிஸ்தானும் கேட்டுக்கொண்டால், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக டிரம்ப் கூறியிருக்கிறார்.

அமெரிக்க அதிபரிடம் பிரதமர் மோடி அப்படி எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. பாகிஸ்தானுடன் உள்ள பிரச்சினைகளை இரு நாடுகளும் தங்களுக்குள் மட்டுமே பேசி தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது. சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் பிரகடனத்தின் அடிப்படையிலேயே பிரச்சினைக்கு தீர்வு இருக்கும். எனவே இதில் மூன்றாவது நாட்டின் தலையீடு தேவை இல்லாதது, என கூறியிருந்தார். இந்நிலையில், காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக டிரம்ப் தெரிவித்த கருத்துக்காக அமெரிக்க எம்.பி. மன்னிப்பு கோரியுள்ளார். இந்திய தூதர் ஹரிஷ் சிரிங்லாவிடம் அமெரிக்க எம்.பி. பிராட் ஷெர்மன் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தெற்காசிய வெளியுறவுக் கொள்கை குறித்து தெரிந்த அனைவருக்கும், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தத்தை இந்தியா எதிர்ப்பது தெரிந்திருக்கும். பிரதமர் மோடி இவ்வாறான விஷயத்தை ஒருபோதும் பரிந்துரைக்க மாட்டார் எனவும் அனைவருக்கும் தெரியும். இவ்விகாரத்தில் டிரம்பின் கருத்து தகுதியற்ற முறையிலும், கற்பனை மிகுந்ததாகவும், சங்கடத்திற்குரிய வகையிலும் உள்ளது. எனவே, டிரம்பின் இத்தகைய கருத்துக்காக இந்திய தூதர் ஹரிஷ் சிரிங்லாவிடம் மன்னிப்பு கோரினேன், என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: