×

இன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்த நிலையில் மேலும் 4 வாரம் அவகாசம் கோரி அதிருப்தி எம்எல்ஏக்கள் சபாநாயகருக்கு கடிதம்

பெங்களூரு: நேரில் ஆஜராகி விளக்கமளிக்க 4 வாரம் அவகாசம் கோரி கர்நாடக சபாநாயகருக்கு அதிருப்தி எம்எல்ஏக்கள் கடிதம் எழுதியுள்ளனர். அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யுமாறு காங்கிரஸ் - மஜத கூட்டணி கட்சி தலைவர்கள் கடிதம் அனுப்பிய நிலையில், சபாநாயகர் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளார். கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக குமாரசாமி ஆட்சி காப்பாற்றப்படுமா? அல்லது கவிழ்க்கப்படுமா? என்ற கேள்விக்கு பதில் நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் தான் உள்ளது. காங்கிரஸ் - மஜத கூட்டணி கட்சியை சேர்ந்த 16 எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்தனர். மேலும் அவர்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்கவில்லை.

இதையடுத்து, ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கக்கோரி 15 அதிருப்தி  எம்எல்ஏ-க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணையில், ராஜினாமா கடிதம் மீது முடிவெடுக்க சபாநாயகருக்கு காலக்கெடு விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு மனுக்களை தள்ளுபடி செய்தது. இருப்பினும், நியாயமான காலவரையறைக்குள் 15 அதிருப்தி எம்எல்ஏ-க்கள் ராஜினாமா விவகாரத்தில், சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. ஏற்கனவே, இந்த வழக்கில் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மீது தகுதி நீக்கம் போன்ற எந்த நடவடிக்கைகளையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டிருந்தது. அதேபோல, நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வது எம்எல்ஏ-க்களின் விருப்பம் என தெரிவித்திருந்தது.

மேலும் அவர்களை சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள வேண்டும் என அதிருப்தி எம்எல் ஏக்களை நிர்பந்திக்கக்கூடாது எனவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதத்தில் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் பங்கேற்கவில்லை. இதையடுத்து, அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணாக உள்ளது என கர்நாடக காங்கிரஸ் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது. இந்த நிலையில், அதிருப்தி எம்எல்ஏ-க்கள் அனைவரும் நாளை காலை 11 மணிக்கு தன்னை நேரில் சந்திக்குமாறு சபாநாயகர் சம்மன் அனுப்பியிருந்தார். இந்நிலையில்மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள், கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளனர். நேரில் ஆஜராகி விளக்கமளிக்க 4 வாரம் அவகாசம் கோரி கர்நாடக சபாநாயகருக்கு அதிருப்தி எம்எல்ஏக்கள் கடிதம் எழுதியுள்ளனர்.


Tags : Time off, dissatisfied MLAs, letter to Speaker
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்