காமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: 7 தங்கம் வென்று இந்தியா சாதனை

கட்டாக்: காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டித் தொடரின் அனைத்து பிரிவிலும் அசத்திய இந்திய அணி வீரர், வீராங்கனைகள் 7 தங்கப் பதக்கங்களையும் வசப்படுத்தி சாதனை படைத்தனர். ஒடிஷா மாநிலம் கட்டாக் நகரில் நடைபெற்ற இந்த தொடரின் ஆண்கள் மற்றும் மகளிர் குழு போட்டிகளில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்தியா குழு பிரிவின் 2 தங்கப் பதக்கத்தையும் கைப்பற்றியது.இதைத் தொடர்ந்து தனிநபர் ஆண்கள் ஒற்றையர், மகளிர் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகள் நடைபெற்றன. மூன்று வகை இரட்டையர் ஆட்டங்களிலும் இந்திய ஜோடிகளே சாம்பியன் பட்டம் வென்று அசத்த, இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில், மகளிர் ஒற்றையர் பைனலில் இந்திய வீராங்கனைகள் ஆயிகா முகர்ஜி - மதுரிகா பட்கர் நேற்று மோதினர்.

இதில் அபாரமாக செயல்பட்ட ஆயிகா முகர்ஜி 11-6, 11-4, 11-9, 19-17 என்ற செட் கணக்கில் மதுரிகா பட்கரை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் தொடரின் மகளிர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்திய வீரர்கள் சத்யன் குணசேகரன் - ஹர்மீத் தேசாய் மோதினர். இதில் முதல் நிலை வீரர் ஜி.சத்யன் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அபாரமாக விளையாடிய ஹர்மீத் தேசாய் 4-3 என்ற செட் கணக்கில் போராடி வென்று முதலிடம் பிடித்தார். முதல் 2 செட்களையும் இழந்து 0-2 என பின்தங்கியிருந்த ஹர்மீத் பின்னர் சுதாரித்து விளையாடி வெற்றியை வசப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரின் 7 தங்கப் பதக்கங்களையும் முழுமையாக அள்ளி இந்திய அணி சாதனை படைத்தது.

Related Stories: