நிஷாந்த் 57, ஜெகதீசன் 87* மதுரைக்கு 183 ரன் இலக்கு

திருநெல்வேலி: திண்டுக்கல் டிராகன்ஸ் அணியுடனான டிஎன்பிஎல் டி20 லீக் ஆட்டத்தில், மதுரை பேந்தர்ஸ் அணிக்கு 183 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.நெல்லையில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற மதுரை பேந்தர்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் தொடக்க வீரர்களாக ஹரி நிஷாந்த், என்.ஜெகதீசன் களமிறங்கினர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 13.2 ஓவரில் 104 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது.

நிஷாந்த் 57 ரன் (47 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி கவுஷிக் பந்துவீச்சில் ரகில் ஷா வசம் பிடிபட்டார். கேப்டன் ஆர்.அஷ்வின் 16 ரன் எடுத்து வெளியேற, அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். முகமது 13 ரன் எடுத்தார். திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது.ஜெகதீசன் 87 ரன் (51 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்), ரோகித் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மதுரை அணி பந்துவீச்சில் ரகில் ஷா 3, கிரண் ஆகாஷ் 2, ஜே.கவுஷிக் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 183 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் மதுரை பேந்தர்ஸ் களமிறங்கியது.

Related Stories: