கெயிக்வாட் 99, ஷுப்மான் கில் 69, ஷ்ரேயாஸ் 61* 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா ஏ அபார வெற்றி: 4-1 என தொடரை கைப்பற்றியது

ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் நடந்த 5வது ஒருநாள் போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா ஏ அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. மணிஷ் பாண்டே தலைமையிலான இந்தியா ஏ அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 3-1 என முன்னிலை வகிக்க, 5வது மற்றும் கடைசி போட்டி ஆன்டிகுவா, கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாசில் வென்று பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி 47.4 ஓவரில் 236 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க வீரர்கள் அம்ப்ரிஸ் 61 ரன் (52 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), ஓட்லி 21 ரன் எடுத்தனர். 7வது வீரராகக் களமிறங்கிய ரூதர்போர்டு அதிரடியாக 65 ரன் (70 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். காரி பியரி 35 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா ஏ பந்துவீச்சில் தீபக் சாஹர், நவ்தீப் சாய்னி, ராகுல் சாஹர் தலா 2, குருணல் பாண்டியா, கலீல் அகமது, அக்சர் பட்டேல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 237 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஏ அணி களமிறங்கியது. ருதுராஜ் கெயிக்வாட், ஷுப்மான் கில் இருவரும் துரத்தலை தொடங்கினர்.

அபாரமாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 11.4 ஓவரில் 110 ரன் சேர்த்தது. கில் 69 ரன் (40 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி கார்ன்வெல் பந்துவீச்சில் அகீம் ஜார்டன் வசம் பிடிபட்டார். அடுத்து கெயிக்வாட் - ஷ்ரேயாஸ் அய்யர் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 112 ரன் சேர்த்தனர். கெயிக்வாட் 99 ரன் எடுத்து (89 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்) துரதிர்ஷ்டவசமாக சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.
இந்தியா ஏ அணி 33 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 237 ரன் எடுத்து அபாரமாக வென்றது. ஷ்ரேயாஸ் 61 ரன் (64 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் மணிஷ் பாண்டே 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ருதுராஜ் கெயிக்வாட் ஆட்ட நாயகன் விருதுபெற்றார். இந்தியா ஏ அணி 4-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றிய நிலையில், அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (அங்கீகாரமற்றது) மோதுகின்றன.முதல் டெஸ்ட் (4 நாள் ஆட்டம்) நார்த் சவுண்டில் நாளை தொடங்குகிறது.Tags : India won the series by 4-1
× RELATED வெஸ்ட் இண்டீஸ் உடனான முதலாவது டி20...