×

மேட்டூர் உபரிநீர் திட்டத்தை முழு அளவில் செயல்படுத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை சேலம் மாவட்டத்தில் உள்ள 100 ஏரிகளில் நிரப்பும்  திட்டம் ரூ.565 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகள் நிரப்பப்படும். இதனால்  சுற்றியுள்ள நிலங்கள் பாசன வசதி பெறும்.அத்துடன் சேலம் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால், அங்கு குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படாது. அதே நேரத்தில் முதல்வரின் அறிவிப்பு சேலம், நாமக்கல் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றாது. மேட்டூர் அணையின் உபரிநீரை திருமணிமுத்தாறு, சரபங்கா ஆகிய ஆறுகளை இணைத்து சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்கள் வரை கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு.

5 இணைப்புகளை மேற்கொள்வதன் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும். இதனால்், சேலம், நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் மொத்தம்  30,154 ஏக்கர் நிலங்கள்  நேரடியாக பாசன வசதி பெறும். அத்துடன் நிலத்தடி நீர் ஆதாரம் மேம்படுவதன் மூலம் 18,228 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இத்திட்டத்தில் வசிஷ்ட நதி என அழைக்கப்படும் வட வெள்ளாற்றையும் இணைத்தால் விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வரை காவிரி நீரை கொண்டு வர முடியும். அண்மையில், தெலங்கானாவில் தொடங்கப்பட்ட, உலகின் மிகப்பெரிய நீரேற்று திட்டமான காலேஸ்வரம் திட்டம், குஜராத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சவுராஷ்டிரா நர்மதா பாசன திட்டம் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது மேட்டூர் உபரி நீர் திட்டம் எளிதாக செயல்படுத்தப்படக்கூடியதாகும்.


Tags : Mettur , implemented , fullest , sewer Ramadas emphasis
× RELATED ஜோலார்பேட்டை அருகே குழந்தைகளை...