×

தமிழகத்துக்கும், தமிழ்மொழிக்கும் தொடர்ந்து குரல் கொடுப்பேன்: வைகோ பேட்டி

சென்னை: தமிழகத்திற்காகவும் தமிழ் மொழிக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்பதாக வைகோ தெரிவித்தார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க சென்னையில் இருந்து  நேற்று காலை 8.30 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:23 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவையில் உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொள்ள இருக்கிறேன். 2 வருடம் வேலூர் சிறையில், பொடா சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்தேன். 17 ஆண்டுகளுக்கு பிறகு, நாடாளுமன்றம் செல்கிறேன். ஏற்கனவே முதன்முதலாக நாடாளுமன்றத்துக்கு செல்லும்போது, முரசொலி மாறன்தான் என்னை ஆதரித்து அரவணைத்து தேற்றினார். கருணாநிதி, என்னை நாடாளுமன்றத்துக்கு 3 முறை எம்பியாக அனுப்பி வைத்தார். இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வலுக்கட்டாயமாக என்னை மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கிறார்.தமிழகம் பல்வேறு அபாயங்களை எதிர்நோக்கி இருக்கிறது. மேகதாது அணை கட்டுவதன் மூலம் காவிரி டெல்டா பகுதி அடியோடு பாழாகி விடும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் மூலம் தமிழகம், சகாரா பாலைவனம் போல மாற வாய்ப்புள்ளது. அணுக்கழிவுகளை கொட்டுவதன் மூலம் 100 அணுகுண்டுகள் வெடிப்பால் எந்த அளவு ஆபத்து ஏற்படுமோ, அதே ஆபத்து தமிழகத்துக்கு ஏற்படும் நிலை உள்ளது. தமிழகம் சுடுகாடாக மாறிவிடும். நியூட்ரினோ திட்டத்தால் தேனியில் இருக்கக்கூடிய முல்லை பெரியாறு அணையும், கேரளாவில் உள்ள இடுக்கி அணையும் உடையும் அபாயத்தில் இருக்கிறது. இதையெல்லாம் தமிழகத்தை எதிர்நோக்கியுள்ள ஆபத்துக்கள்.

மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு நெக்ஸ்ட் என்ற மற்றொரு அபாயகரமாக திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது. நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி எடுத்து வருகிறது. அனைத்து மத நம்பிக்கை கொண்டவர்கள் இருக்கும் நாட்டில், மதசார்பின்னையை சீர்குலைக்கும் ஆபத்து நேர்ந்துள்ளது. ‘‘தமிழ்மொழி இந்தியாவின் ஆட்சிமொழியாக வேண்டும். இந்தியாவில் உள்ள 22 மொழிகளும் ஆட்சி மொழியாகும் வரை ஆங்கிலம் நம்நாட்டில் இருக்க வேண்டும்’’ என்பது ராஜாஜியின் கருத்து. அதையெல்லாம் சீர்குலைக்கிறது மத்திய அரசு. அரசியல் சட்டத்தையே சீர்குலைத்து சிறைக்கு சென்றிருக்கிறேன். இப்போது, நான் செல்லக்கூடிய நாடாளுமன்றம் எனக்கு புதிது. அங்குள்ள உறுப்பினர்கள் எனக்கு பழக்கம் இல்லாதவர்கள். ஆனாலும் தமிழகத்துக்காகவும், தமிழ் மொழிக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : continue, voice Tamil,Tamil,Vaiko, Interview
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்