தமிழிசை தடாலடி பேட்டி தமிழகத்தை அதிமுக சீரழித்துவிட்டது

திண்டிவனம்: தமிழகத்தை அதிமுக சீரழித்துவிட்டது, மத்திய அரசு திட்டங்களை எதிர்க்கிறது என்று அதிமுகவை கடுமையாக தாக்கி திண்டிவனத்தில் தமிழிசை பேட்டி அளித்தார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாஜ கட்சி உறுப்பினர் சேர்க்கை  கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறுகையில், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழகத்தை சீரழித்துவிட்டன. கெயில் ஹைஹட்ரோ கார்பன் திட்டங்களை அரசியல் செய்வதற்காக எதிர்க்கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்த்து வருகின்றன. பத்தாண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது ைஹட்ரோ கார்பன் தமிழகத்தில் எடுக்கப்பட்டு வந்தது. நீட்தேர்வை தமிழக  மாணவர்கள் புரிந்துகொண்டுள்ளனர். ஆனால் இந்த நீட்டை வைத்து அரசியல் கட்சியினர் தமிழகத்தில் அரசியல் செய்து வருகின்றனர்.

வசதிபடைத்தவர்கள்  மட்டுமே மும்மொழி கொள்கையை பயன்படுத்தி  தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைத்து வருகின்றனர். ஏழை மக்களுக்கு புதிய கல்வி கொள்கையை எடுத்து செல்வதற்கு எதிர்க்கட்சிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அவர்களும் மற்ற மொழிகளை கற்கக்கூடாது என்பதற்காகவே என்றார். அப்போது அதிமுகவையும் குறைகூறுகிறீர்களே, அதிமுக கூட்டணியில் நீங்கள் இல்லையா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கூட்டணி இல்லையென்றால் வேலூர் தொகுதியில் வேட்பாளரை நிறுத்தி இருப்போமே. வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளரை ஆதரிக்கின்றோம். மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் எதிர்த்து வருகின்றனர் என பதில் அளித்தார்.

Related Stories: