×

அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பாக். பிரதமர் இம்ரான் சந்திப்பு: இருதரப்பு உறவு சீரானது

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று சந்தித்து பேசினார். இதனால் இருநாடுகள் இடையே இருதரப்பு உறவு மீண்டும் சீரடைந்துள்ளது. தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் பொய்தகவல்களை அளித்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்தாண்டு குற்றம் சாட்டினார். இதனால் பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா அளிக்கும் பாதுகாப்பு நிதியையையும் நிறுத்தி வைக்க உத்தரவிட்டார். இதனால் இரு நாடுகள் இடையே உறவு பாதிக்கப்பட்டது. இந்த உறவை சீராக்கும் முயற்சியில் இம்ரான்கான் இறங்கினார். இதற்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் உதவினார். ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை விலக்கி கொள்ள விரும்பும் அதிபர் டிரம்ப், தலிபான் தலைவர்களுடன் அமெரிக்கா அமைதி பேச்சு வார்த்தை நடத்த உத்தரவிட்டார். இதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரானின் உதவி தேவை என்று கூறிய டிரம்ப், அவரை சந்தித்து பேச தயார் என கடந்த மார்ச் மாதம் கூறினார்.

இந்நிலையில் அதிபர் டிரம்ப் அழைப்பை ஏற்று 3 நாள் பயணமாக, இம்ரான் கான் அமெரிக்கா சென்றார். வாஷிங்டனில் பாகிஸ்தான் மக்களை சந்தித்து இம்ரான் கான் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:பாகிஸ்தானில் தற்போது நடக்கும் சம்பவங்கள் எல்லாம், புதிய பாகிஸ்தானில் நடப்பவை. தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை பொறுப்புடன் செயல்பட எனது அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நாட்டில் திறமையானவர்களை அடையாளம் காணும் முறையை கொண்டு வருவதில் உறுதியாக இருக்கிறேன். இந்தியாவில் முகாலாயர் ஆட்சி நடந்தபோது, உலகிலேயே சூப்பர் பவர் நாடாக இருந்தது. 150 ஆண்டுகால முகாலாயர் ஆட்சியில், இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி, உலகின் ஒட்டு மொத்த உற்பத்தியில் 25 சதவீதத்தை விட அதிகமாக இருந்தது. ஆனால் அவுரங்கசீப்புக்கு பின் வந்தவர்கள் திறமையற்வர்களாக இருந்ததால் முகாலாய சாம்ராஜ்யம் வீழ்ந்தது. பாகிஸ்தானில் உள்ள அனைவரும் திறமையானவர்களாகவும், சம உரிமை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் என் தொலைநோக்கு. ஊழல் காரணமாக பாகிஸ்தான் பின்தங்கியுள்ளது. வெளிநாட்டு கம்பெனிகள், பாகிஸ்தானில் ஊழல் அதிகம் என்பதால், அங்கு முதலீடு செய்ய முடியாது என்கின்றனர்.

ஊழல் புரிந்த முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சிறையில் ஏ.சி. கேட்கிறார், வீட்டு சாப்பாடு கேட்கிறார். அவருக்கு டி.வி கூட கிடைக்காது. இதை கேட்டு நவாஸ் மகள் மரியம் பீவி கூச்சலிடலாம். அவரிடம் நான் கூறுவது, ஊழல் மூலம் சம்பாதித்த பணத்தை திருப்பி கொடுங்கள் என்பதுதுான். இதேபோல் முன்னாள் அதிபர் சர்தாரி சிறைக்கு செல்லும்போதெல்லாம், உடல்நிலை சரியில்லை எனக் கூறி மருத்துவமனையில் படுத்துக் கொள்கிறார். இந்த முறை அவர் மருத்துவமனைக்கு செல்ல முடியாது. பாகிஸ்தானில் ஊழலற்ற அரசு அமைய செய்வேன். உலக மக்கள் ஒரு நாள் பாகிஸ்தானுக்கு வேலை தேடி வர வேண்டும் என்பதுதான் என் கனவு.

இவ்வாறு இம்ரான்கான் பேசினார். இந்நிகழ்ச்சிக்குப்பின் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில், அதிபர் டிரம்ப்ைப இம்ரான் கான் சந்தித்து பேசினார். தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான்  எடுத்துள்ள நடவடிக்கைகள், இந்தியா உறவை மேம்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள், ஆப்கன் அமைதி பேச்சுவார்த்தை,  பாகிஸ்தானுக்கு மீண்டும் அமெரிக்க நிதியுதவி கிடைக்க செய்வது போன்றவை  குறித்து டிரம்பிடம் அவர் பேசியதாக தெரிகிறது. கூட்டத்தில் இம்ரான்கான் பேசிக் கொண்டிருந்தபோது, பலுசிஸ்தான் இளைஞர்கள் சிலர் திடீரென இருக்கையை விட்டு எழுந்து பலுசிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : US President Trump, Pak. Meeting with Prime Minister Imran
× RELATED உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள்...