நெற்குன்றத்தில் பரபரப்பு துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி ஆட்டோ டிரைவர் படுகொலை: மனைவி, கள்ளக்காதலனின் மனைவி கைது

சென்னை: நெற்குன்றத்தில் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி ஆட்டோ டிரைவர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மனைவி, கள்ளக்காதலனின் மனைவி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சென்னை நெற்குன்றம் சக்தி நகர் 24வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (28), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி காயத்ரி (26). இவர், வானகரத்தில் உள்ள மீன் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். இருவரும் கடந்த 7 வருடத்துக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். 3 பிள்ளைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (30). கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்கிறார். இவரும், நாகராஜும் நண்பர்கள். நாகராஜின் மனைவி காயத்ரியுடன் மகேந்திரன் சகஜமாக பேசியுள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளத்காதலாக மாறியது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நாகராஜ் வீட்டுக்கு மகேந்திரன் வந்தார். அங்கு காயத்ரியும் மகேந்திரனும் படுக்கையில் ஜாலியாக இருந்தனர். இதை நாகராஜ் பார்த்துவிட்டார்.

ஆத்திரம் அடைந்து மகேந்திரனை அடிக்க பாய்ந்தார். அங்கிருந்து அவர் தப்பி விட்டார். அன்று முதல் நாகராஜுக்கும், காயத்ரிக்கும் தகராறு ஏற்பட்டது. இருவரும் தனித்தனியே வசித்து வந்தனர். குழந்தைகளை, தனது அக்கா வீட்டில் காயத்ரி விட்டிருந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு உறவினர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சமாதானம் ஆனது. நாகராஜும், காயத்ரியும் மீண்டும் சேர்ந்து வாழ்ந்தனர். ‘‘மகேந்திரன் எனக்கு துரோகம் செய்து விட்டான். அவனை கொல்லாமல் விடமாட்டேன்’’ என்று ஒவ்வொருவரிடமும் நாகராஜ் கூறி வந்துள்ளார். இதை அறிந்த மகேந்திரனின் மனைவி பானு (25) அதிர்ச்சியடைந்தார். உடனே, காயத்ரியை சந்தித்து, ‘‘எனது கணவரை உனது கணவர் கொலை செய்து விடுவதாக சொல்கிறாராம். எனக்கு பயமாக உள்ளது’’ என்று கூறியுள்ளார். அதற்கு காயத்ரி, ‘‘எனது கணவரும் என்னை தினமும் கொடுமைப்படுத்தி வருகிறார். அவரால் நான் நிம்மதியாக வாழ முடியவில்லை’’ என்று கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் சேர்ந்து, நாகராஜை கொலை செய்ய திட்டம் தீட்டினர்.

இருவரும் திட்டமிட்டபடி நேற்று முன்தினம் இரவு 1.30 மணியளவில், நாகராஜ் வீட்டுக்கு பானு வந்தார். நாகராஜ் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார். காயத்ரியும், பானுவும் நாகராஜின் முகத்தை தலையணையால் அமுக்கி, துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். பின்னர் எதுவும் தெரியாதது போன்று, பானு அவரது வீட்டுக்கு சென்று விட்டார். காயத்ரியும், அதிகாலை 4 மணியளவில், குழந்தைகளை, தனது அக்கா தனலட்சுமி வீட்டில் விட்டுவிட்டு, தம்பி வினோத்தின் ஆட்டோவில் வானகரத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கு புறப்பட்டார். அப்போது, ‘‘உனது மாமா (நாகராஜ்) இரவு முழுவதும் தூங்காமல் தற்கொலை செய்து கொள்வதாக புலம்பிக் கொண்டிருக்கிறார். என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை. எனக்கு பயமாக உள்ளது, அவரை பார்த்துக்கொள்’’ என்று கூறியுள்ளார். உடனே நாகராஜ் வீட்டுக்கு வினோத் சென்றுள்ளார்.

அங்கு, காது மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையிலும், துப்பட்டாவால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையிலும் நாகராஜ் இறந்து கிடந்தார். அவரது உடலை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த வினோத், கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், மூச்சு திணறடித்து நாகராஜ் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காயத்ரியிடம் நடத்திய விசாரணையில், காயத்ரி, பானு ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது தெரிந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மகேந்திரன், தலைமறைவாக உள்ளார்.

Related Stories: