×

இந்த ஆட்சி எப்போது மாறும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் வேலூர் கோட்டையை வெற்றி கோட்டையாக்கி கலைஞருக்கு காணிக்கையாக்குங்கள்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: இந்த ஆட்சி எப்போது மாறும் என மக்கள் எதிர்பார்க்கும் நிலையில், வேலூர் கோட்டையை வெற்றி கோட்டையாக்கி கலைஞருக்கு காணிக்கையாக்குங்கள் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:முழுமையான வெற்றியை திமுகவும், கூட்டணியும் பெற்று விடக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு-பழிபோட்டு முடக்கப்பட்டதுதான் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல். தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நடவடிக்கையை பொதுமக்களே நன்கு அறிவார்கள். வேலூரில் நடத்தப்பட்ட நாடகங்களையெல்லாம் கடந்து, தமிழ்நாட்டில் 37 மக்களவை தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணி, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியைப் பெற்றது. வேலூரில் பொய்ப்புகார் கற்பித்து, தேர்தல் நிறுத்தப்பட்ட நிலையில், அதே புகார், தேனியில் அசைக்கவியலாத  ஆதாரங்களுடன் அம்பலமாயின. ஆயினும் தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தது. அதன் காரணமாகத்தான் அந்த ஒற்றைத் தொகுதியில் மட்டும் சொற்ப முன்னணியில் அதிமுகவினால் வெற்றியைக் கடைச்சரக்காக வாங்கிட முடிந்தது. தேனியில் மட்டுமா அல்வா கொடுத்தார்கள்? இந்த ஆட்சி நடைபெறுகிற நாட்களெல்லாம் மக்களுக்கு அல்வாதானே கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் சாதாரண அல்வா அல்ல, டெல்லி அல்வா. அங்கே கிண்டித்தரப்படுவதை இங்கே விநியோகிக்கும் அரசியல் ஏஜென்ட்டாக மாறிவிட்டார்கள் அதிமுக ஆட்சியாளர்கள்.

திமுக கூட்டணியின் மக்களவை உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் செயல்படும் வேகமும் விவேகமும் வீச்சும் தமிழ்நாட்டின் உரிமைகளை உறுதியாக நிலைநாட்டுவதுடன், இந்திய அரசியலிலும் புயலாய்ச் சுழன்றடித்துப் புதிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. புதிய கல்விக் கொள்கையையும் அது வலியுறுத்தும் மும்மொழித் திட்டத்தையும் எதிர்த்து நாடாளுமன்றத்தில் நாடெங்கும் எதிரொலிக்க முழங்குகிறார்கள் நமது எம்.பிக்கள்.அஞ்சல் துறைத் தேர்வில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டதற்கு அவையே அதிரும்படி நமது எம்.பிக்கள் எழுப்பிய உரிமைக் குரலால், அந்தத் தேர்வே ரத்து செய்யப்படும் நிலை உருவாகி, மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.   என்.ஐ.ஏ. சட்டத்திருத்தத்தில் சிறுபான்மை மக்களின் நலன் பாதிக்கப்படக்கூடாது என்ற வாதம், 7 தமிழர்கள் விடுதலை குறித்த நியாயம், நீட் தேர்வு போலவே மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிரான கேள்விகள், ரயில்வே துறையை தனியார்மயமாக்குதை எதிர்த்தும்-தமிழ்நாட்டுக்கான ரயில்வே திட்டங்களை வலியுறுத்தியும் அழுத்தமான சோஷலிசக்குரல் என நாடாளுமன்ற அவையிலும், வெளியிலும் ஓயாமல் உன்னதமாகச் செயல்பட்டு வருகிறார்கள் திமுக மற்றும் கூட்டணியின் மக்களவை உறுப்பினர்கள்.   

அதே நேரத்தில், ஆட்சியில் உள்ள அதிமுகவின் செயல்பாடு எப்படி இருக்கிறது? நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களை ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு நிராகரித்ததையே வெளிப்படுத்தாமல், மறைத்து வைத்துக்கொண்டு, நீட்டை எதிர்ப்பதாக போலி நாடகம் நடத்தி, பொய்வேடம் பூண்டு, மக்களுக்கு மன்னிக்க முடியாத மாபாதகம் செய்திருக்கிறது அதிமுக அரசு. ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்பட எல்லா முக்கியப் பிரச்னைகளிலும் இரட்டை வேடத்தையே அதிமுக அரசு கடைபிடிக்கிறது. சொந்த டெண்டர் லாபங்களுக்காக அதனை அதிவேக சாலை எனப் பெயர் மாற்ற, திட்டத்தை செயல்படுத்த வேகம் காட்டுகிறது எடப்பாடி தலைமையிலான அரசு.  ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் வேலூர் மக்களவைத் தேர்தல் களம், ஜனநாயகம் நமக்கு வழங்கியிருக்கும் மேலும் ஒரு நல்வாய்ப்பாகும். திமுக சார்பில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் பேராதரவுடன் கதிர் ஆனந்த் களம் காண்கிறார். வேலூர் தேர்தல் களத்தில் செயலாற்றும் திமுகவினர் அனைவரும் அவரவர் பகுதிக்குரிய பொறுப்பாளர்களுடன் இணைந்து நின்று, ஒவ்வொரு வாக்காளரையும் நேரில் சந்தித்து, அவர்களின் வாக்குகள் உதயசூரியனுக்கே என்பதை உறுதி செய்ய வேண்டும். வேலூர் கோட்டையை வெற்றிக் கோட்டையாக்கிட உத்வேகத்துடன் உழைத்திடுவீர். அயராது பணியாற்றி, வெற்றிக் கனியைப் பறித்து, தலைவர் கலைஞர் தங்கத் திருவடியில் காணிக்கையாக்கிடுவீர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சந்திரயான் சாதனைக்கு வாழ்த்து
திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் விடுத்த வாழ்த்து செய்தியில், ‘‘சந்திரயான்-2 விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியதற்கு அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான முன்னேற்றம் நம்பமுடியாத அளவிற்கு பெருமையாக உள்ளது. மேலும் அறிவியல் சார்ந்த செயல்பாடுகளை இந்த சமூகத்திற்காக தொடர்ந்து செய்ய வேண்டும்’’ என கூறியுள்ளார்.

Tags : People,expect, rule , change, Vellore Fort
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்