ஆந்திராவில் தேர்வு எழுதிய 15 ஆயிரத்து 775 பெண்களில் 61 பேர் எஸ்ஐயாக தேர்ச்சி: தேர்வு முடிவுகளை முதல்வர் வெளியிட்டார்

திருமலை: ஆந்திர மாநிலத்தில் எஸ்ஐ பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டார். இதில் தேர்வு எழுதிய 15,775 பெண்களில் 61 பேர் மட்டும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், வெலகம்புடி சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் உதவி ஆய்வாளர் பணியிடத்துக்கான தேர்வு  முடிவுகளை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று வெளியிட்டார். இதில் உள்துறை அமைச்சர் சுச்சரித்தா, டிஜிபி கவுதம் சவாங், புலனாய்வு துறை முதன்மை அதிகாரி குமார் விஸ்வஜித் கலந்துகொண்டனர். அப்போது உள்துறை அமைச்சர் சுச்சரித்தா நிருபர்களிடம் கூறியதாவது: 333 உதவி ஆய்வாளர், சிவில், ரிசர்வ், ஏஆர், ஏபிஎஸ்பி, துணை ஜெயிலர்கள்,  நிலைய தீயணைப்பு அதிகாரி பதவிக்கான தேர்வு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 414 பேர் பங்கேற்றனர். உடற்தகுதி தேர்வு, மருத்துவ தேர்வுக்கு பிறகு  32 ஆயிரத்து 745 பேர் தேர்வு எழுதினர். இதில் 149 சப்-இன்ஸ்பெக்டர், 75 ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர், 75 சிறப்பு அதிரடிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள், 10 துணைச் ஜெயிலர்கள், 20 நிலைய தீயணைப்பு அதிகாரிகளுக்கான பதவிக்கு தேர்வு எழுதினர்.

இந்த தேர்வில்  நெல்லூரை சேர்ந்த ரமேஷ், கடப்பாவை சேர்ந்த ஷேக் உசேன்,  ரவி கிஷோர் 255 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பிடித்தனர். 15 ஆயிரத்து 775 பெண்கள் இந்த தேர்வில் பங்கேற்ற நிலையில் 61 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கிருஷ்ணா  மாவட்டத்தை சேர்ந்த பிரனஜா 224 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்தார். சான்றிதழ் சரிபார்க்கும் பணி முடிந்த பிறகு இவர்கள் அனைவரும் பயிற்சிக்கு அனுப்பட   உள்ளனர்.  மேலும்  சட்டம்- ஒழுங்கை காப்பாற்றுவதில் காவல் துறைக்கு முக்கிய பங்கு உள்ளது. இருப்பினும் காவல்துறையில் 17 சதவீதம் காலிப்பணியிடங்கள் உள்ளது. தற்போது வாரத்திற்கு ஒரு முறை போலீசாருக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தம் குறைக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதன் மூலமாக போலீசாரும் மனத்திருப்தியுடன் பொதுமக்களுக்கு சேவை செய்வதோடு சட்டம் ஒழுங்கை மேலும் சிறப்பாக கவனிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: