போலி வாகன இன்சூரன்ஸ் ஏமாறாதீங்க... ஏமாற்றாதீங்க..

புதுடெல்லி: போலி வாகன இன்சூரன்ஸ் எண்ணிக்கை, கடந்த 2 ஆண்டுகளில் இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளதாக, இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  வாகனங்களுக்கு காப்பீடு கட்டாயம். ஆனால், காப்பீடு கட்டணங்கள் உயர்வு காரணமாக வாகன ஓட்டிகள் தயக்கம் காட்டுகின்றனர். சிலர் புதுப்பிக்க தவறி விடுகின்றனர். ஆனால், போக்குவரத்து போலீசார் சோதனையில் சிக்கினால் அபராதம் செலுத்த வேண்டி வரும் என்பதால், போலி காப்பீடுகளுடன் சிலர் உலா வருகின்றனர் என கூறப்படுகிறது.  இவ்வாறு போலி மோட்டார் வாகன காப்பீடு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2016-17 நிதியாண்டில் 498 போலி காப்பீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2017-18ல் 823 ஆகவும், கடந்த நிதியாண்டில் 1,192ஆகவும் அதிகரித்துள்ளது என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில் தெரிவித்திருந்தார்.

 இதில், பெரும்பாலானவை டிரக் மற்றும் டூவீலர் ஓட்டுபவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து போலீசாரிடம் அதிகமாக சிக்குவது டிரக் மற்றும் டூவீலர் ஓட்டுபவர்கள்தான். இந்த கெடுபிடிக்கு பயந்து போலி காப்பீடுகளை அவர்கள் வாங்குவதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து காப்பீடு நிறுவன வட்டாரங்கள் கூறுகையில், ‘‘உண்மையான மோட்டார் வாகன காப்பீடுகள் 10,000 என இருந்தால், போலி காப்பீடுகள் 5,000 முதல் 6,000 வரை உள்ளன. இவற்றை கண்டறிந்து காப்பீடு நிறுவனங்கள் சார்பில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் படி உத்தரபிரதேசத்தில் பெரோஸ்பூர், கேரளாவில் திருவனந்தபுரம், மகாராஷ்டிராவில் அக்லுஜ் பகுதியில்தான் பெரும்பாலான போலி பாலிசிக்கள் விற்பனை ஆகியுள்ளன. சில போலி ஏஜென்ட்டுகள் குறைந்த விலைக்கு பாலிசி தருவதாக கூறி போலி பாலிசியை விற்றுள்ளனர். சில வாகன உரிமையாளர்கள், போலீசிடம் இருந்து தப்பிக்க போலி காப்பீடுகளை தெரிந்தே வாங்கியுள்ளனர்’’ என்றனர்.

Related Stories: