பேஸ்புக்கில் என்ஐஏ குறித்து விமர்சித்த வாலிபர் கைது

முத்துப்பேட்டை:  ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் சென்றாண்டு பாஜக பிரமுகர் ஒருவரை கொலை  செய்யும் நோக்கத்தில் சிலர் அரிவாளால் வெட்டினர். இச்சம்பவத்தில் குற்றவாளியாக கீழக்கரை, தேவிப்பட்டினம், பரங்கிப்பேட்டை, திருவல்லிக்கேணி ஆகிய பகுதியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.  இந்த வழக்கு தேசிய புலனாய்வு பிரிவு (என்ஐஏ பிரிவு) விசாரணைக்கு மாற்றப்பட்டது. தேவிபட்டிணம் ஷேக்தாவூது என்பவர் கொடுத்த தகவலின் பேரில் முத்துப்பேட்டையை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக 2 முறை முத்துப்பேட்டையில் உள்ள  3 வாலிபர்களின் வீடுகளில் என்ஐஏ பிரிவு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்நிலையில் சமீபத்தில் அன்சருல்லா இயக்கத்தில் தொடர்புடையவர்கள் என ஐக்கிய அரபு நாடுகளில் பணிபுரிந்த தமிழகத்தை  சேர்ந்த 14 பேர் அந்த நாடுகள் மூலம் வெளியேற்றப்பட்டு இந்திய தூதரகம் வாயிலாக புதுடெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனையடுத்து டெல்லி விமான நிலையத்தில் என்ஐஏ போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் கைதான 14 பேரில்  ஒருவரான முத்துப்பேட்டை தென்னை மரைக்காயர்தெருவை சேர்ந்த முகமதுமைதீன் மகன் முகமதுஅசாருதீன் (25) என்பவர் வீட்டில் கடந்த 20ம் தேதி என்ஐஏ போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். சோதனையின் போது முத்துப்பேட்டை மஜிதியா தெருவை சேர்ந்த முகமது மகன் தாஜ் என்கிற தாஜிதீன் (39) என்பவர் என்ஐஏவின் நடவடிக்கைகளை விமர்சித்து எம்பிடி புரட்சி இயக்கம் என்ற பெயரில் பேஸ்புக்,  வாட்ஸ்அப்பில் பதிவு செய்தார்.இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி முத்துப்பேட்டை விஏஓ தினேஷ்குமார், காவல் நிலையத்தில் புகார்  அளித்தார். இதையடுத்து போலீசார்,  எம்பிடி  புரட்சி இயக்கம் என்ற பெயரில் பதிவு செய்த தாஜ் என்கிற தாஜிதீனை நேற்று கைது செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்.

Related Stories: