×

புதுச்சேரி சிறப்பு சட்டமன்ற கூட்டம் தீர்மான நகலை கிழித்தெறிந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

புதுச்சேரி,:  புதுச்சேரி  சிறப்பு சட்டமன்ற கூட்டம்  நேற்று காலை கூடியது. முதலில் முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன் மறைவுக்கு முதல்வர் நாராயணசாமி  இரங்கல் தீர்மானம் கொண்டு வந்து பேசினார். இதில், திமுக சிவா, பாஜக  சாமிநாதன், என்.ஆர்.காங்கிரஸ் டிபிஆர் செல்வம், அதிமுக அன்பழகன்,  காங்கிரஸ் எம்என்ஆர் பாலன், அமைச்சர்கள் கமலக்கண்ணன், மல்லாடி  கிருஷ்ணாராவ், நமச்சிவாயம், கந்தசாமி ஆகியோரும் பேசினர்.தொடர்ந்து  புதுச்சேரி நீர்வளத்தை பாதுகாப்பதற்கான தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி  கொண்டு வந்து பேசினார். அப்போது,  குறுக்கிட்டு அதிமுகவை சேர்ந்த அன்பழகன் பேசியதாவது:  திடீரென சிறப்பு சட்டமன்றத்தை  கூட்டுவதன் அவசியம் ஏன் ஏற்பட்டது.  ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்திலேயே இந்த  தீர்மானங்களையெல்லாம் கொண்டு வந்திருக்கலாம். மிக முக்கியமான மக்கள்  பிரச்னைகளான இலவச அரிசி போடாதது, வரி உயர்வு தொடர்பான பிரச்னைகளுக்கு பேச  சிறப்பு சட்டமன்றத்தை இந்த மூன்றாண்டு காலத்தில் ஒருமுறை கூட கூட்டவில்லை.  

அவசர, அவசரமாக  கூட்டி தீர்மானத்தின்  மீது பேச  சொன்னால் எப்படி பேசுவது. எம்எல்ஏக்களாகிய நாங்கள் என்ன உங்கள் அடிமைகளா?  என்றார். அனந்தராமன் (காங்.): மிக முக்கியமான மக்கள் பிரச்னைகளை  பற்றி பேசுவதற்குதான் சட்டமன்றம் கூட்டப்படுகிறது. மாணவர்களை பாதிக்கின்ற  நீட், நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது முக்கிய  பிரச்னையாக அதிமுகவுக்கு தெரியவில்லை. உங்களுக்கு மக்கள் நலனில் துளியும் அக்கறை இல்லை. (இதனால் அவையில் அமளி ஏற்பட்டது.) சாமிநாதன் (பாஜக): நேற்று இரவு 10 மணிக்கு மேல் 4  தீர்மானங்களை கொடுத்து இன்று உடனே பேச சொன்னால் எப்படி பேசுவது. போதுமான கால அவகாசம் வழங்கப்படவில்லை.
அன்பழகன் (அதிமுக):   எம்எல்ஏக்களின் உரிமை யை ஏன் பறிக்கிறீர்கள். சபாநாயகர் சிவக்கொழுந்து:  எம்எல்ஏக்கள்  உரிமையை பறிப்பது நோக்கமல்ல. இதன் மீது பேச உங்களுக்கு முழுமையான வாய்ப்பு  அளிக்கப்படும். இதுவும் மிக முக்கியமான பிரச்னை தான், மக்கள் நலனுக்குத்தான் தீர்மானம் கொண்டு  வரப்படுகிறது.

(இதனை ஏற்க மறுத்து தொடர்ந்து பேசிய அன்பழகன், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்கிறோம் என  ஆவேசமாக கூறிவிட்டு, கையில் வைத்திருந்த தீர்மான நகலை கிழித்து  எறிந்துவிட்டு வெளிநடப்பு செய்தார். அவரை தொடர்ந்து பாஜக,  என்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக  வெளிநடப்பு செய்ததால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது)  முதல்வர் நாராயணசாமி: குடியரசு தலைவர்,  பிரதமர் ஆகியோர் நீர் மேலாண்மைக்கு மாநிலங்கள் அதிக கவனம் செலுத்த  வேண்டும் என கூறியுள்ளனர் தற்போதைய  சூழலில் புதுச்சேரியில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்றாலும் எதிர்கால  சந்ததியினர் பாதிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் நீர் மேலாண்மைக்கு என்னென்ன  திட்டங்களை கொண்டு வரலாம் என்பதற்காக இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டம், நீட், நெக்ஸ்ட் தேர்வுகள், புதிய கல்வி கொள்கை கொண்டு வந்து இந்தி திணிப்பை மத்திய  அரசு கையில் எடுத்துள்ளது. எனவே  புதுச்சேரி மாநில மக்களுக்கு எதிராக இருக்க கூடிய மத்திய திட்டங்களை  நிறைவேற்ற கூடாது என்பதை வலியுறுத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும்  வகையில் இந்த சிறப்பு சட்டமன்றம் கூட்டப்பட்டுள்ளது என்றார்.



Tags : Puducherry Special Assembly Meeting, Opposition Parties, Walk
× RELATED ஈரோடு பவானி சட்டமன்ற தொகுதியில் தடுப்பூசி போட்டால் தங்க காசு