×

தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் 4வது நாளாக கடையடைப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க வலியுறுத்தி நேற்று 4வது நாளாக கடையடைப்பு போராட்டம் நடந்தது. நாகை மாவட்டம் மயிலாடுதுறையை தலைநகராக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. மயிலாடுதுறை சேம்பர்ஆப் காமர்ஸ் சங்கத்தினர் தொடர் கடையடைப்பு போராட்டத்திற்கு விடுத்த வேண்டுகோளை ஏற்று கடந்த 3 நாட்களாக மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம் தாலுகாக்களை சேர்ந்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தொடர் கடையடைப்பு போராட்டத்தை நடத்தினர். சீர்காழி தாலுகாவும் இந்த போராட்டத்தில் குதித்தது. நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) வழக்கம்போல் மயிலாடுதுறை வணிகர்கள் கடைகளை திறந்தனர். குத்தாலம் தாலுகா வர்த்தக சங்கத்தினர் தங்களது வணிக நிறுவனங்களை மூடி மயிலாடுதுறை மாவட்ட கோரிக்கைக்கு ஆதரவாக போராட்டத்தை தொடர்ந்தனர்.

நேற்று 4வது நாளாக கடையடைப்பு போராட்டம் நடந்தது. தொடர்ந்து போராட்டம் வலுப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: நாகை  மாவட்டம் மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் 200க்கும்  மேற்பட்டோர் நேற்று நீதிமன்றத்தை புறக்கணித்து மயிலாடுதுறையை  தலைமையிடமாக கொண்ட மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று உள்துறை செயலருக்கு மனுவை மயிலாடுதுறை ஆர்டிஓ அலுவலகத்தில் அளித்தனர். சீர்காழி: இதேபோல சீர்காழி குற்றவியல் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராஜாராமன் தலைமையில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


Tags : Separate District, Mayiladuthurai, Shop
× RELATED 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு நாளை மறுநாள் வெளியாக வாய்ப்பு