கர்நாடக பேரவை சபாநாயகர் அடுத்த அதிரடி அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சம்மன்: இன்று ஆஜராக உத்தரவு: ஓட்டெடுப்பு எப்போது?

பெங்களூரு: சட்டப்பேரவை  கூட்டத்தொடரில் பங்கேற்கக் கோரி காங்கிரஸ் சார்பில் பிறப்பித்த கொறடா  உத்தரவை மதிக்காத 12 எம்எல்ஏக்களுக்கு அவசர சம்மன் அனுப்பியுள்ள  சபாநாயகர், இன்று காலை 11 மணிக்கு நேரில் ஆஜராகும்படி  உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தில் ஆளும் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசில்  உள்ள 15 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம்  கொடுத்தனர். இதனால் ஆளும்கட்சி பெரும்பான்மை பலமிழந்தது. முதல்வர் பதவி  விலகக் கோரி பாஜவினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் கடந்த 12ம்  தேதி சட்டபேரவை கூட்டம் தொடங்கியதும் முதல்வர் குமாரசாமி, தனது அரசு மீது  நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு  அனுமதி மற்றும் தேதி நிர்ணயம் செய்யும்படி சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ்குமாரிடம்  கோரிக்கை வைத்தார். அதையேற்றுக்கொண்ட சபாநாயகர் ஜூலை 18ம் தேதி நம்பிக்கை  வாக்கு கோரும் தீர்மானம் கொண்டுவர அனுமதி வழங்கினார். இந்நிலையில்,  எம்எல்ஏ பதவியை  ராஜினாமா செய்து கடிதம் கொடுத்த எம்எல்ஏக்கள் தங்கள்  ராஜினாமாவை அங்கீகரிப்பதில் சபாநாயகர் தாமதம் செய்து வருவதாக  உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

அம்மனு மீது விசாரணை  நடத்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, எம்எல்ஏக்கள்  கொடுத்துள்ள ராஜினாமா கடிதம் மீது முடிவெடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு  உள்ளது என்று  கடந்த 17ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.இதனிடையே  சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கட்சி எம்எல்ஏக்கள் பங்கேற்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு முன்னாள் முதல்வரும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி  தலைவருமான சித்தராமையா கொறடா உத்தரவை பிறப்பித்தார். கொறடா  உத்தரவு மதிக்காத 12 காங்கிரஸ் எம்எல்ஏக்களை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ்  பதவி நீக்கம் செய்யக்கோரி சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் சித்தராமையா  மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ்குண்டுராவ் ஆகியோர் சபாநாயகர்  கே.ஆர்.ரமேஷ்குமாரிடம் புகார் கொடுத்தனர்.

அந்த புகாரை பரிசீலனை  செய்த சபாநாயகர், சம்மந்தப்பட்ட 12 எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவை செயலாளர்  மூலம் சம்மன் அனுப்பியுள்ளார். அதில் ‘‘உங்கள் மீது ஏன் கட்சித் தாவல் தடை  சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கூடாது. இது தொடர்பாக ஜூலை 23ம் தேதி  (இன்று) காலை 11 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’’  என்று கூறியுள்ளார்.  கொறடா உத்தரவை மீறிய எம்எல்ஏக்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால்  அவர்கள் பதவியை பறிக்கும் கடினமான முடிவை சபாநாயகர் எடுப்பார் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.இதனிடையே  கர்நாடக சட்டப்பேரவையில் ஆளும்  கூட்டணி அரசு நம்பிக்கைகோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை 22ம் தேதி மாலை 5 மணிக்குள் நடத்த முதல்வர் குமாரசாமிக்கு உத்தரவிடக்கோரி  சுயேச்சை எம்எல்ஏக்களான ஆர்.சங்கர் மற்றும் எச்.நாகேஷ் ஆகியோர் சார்பில்  உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.  நேற்று காலை உச்ச நீதிமன்றம் கூடியதும் தலைமை  நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் அனிருத் போஸ்  ஆகியோர் அமர்வு முன் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி அந்த மனுவை தாக்கல்  செய்தார். ஆனால் இந்த மனுவை அவசர மனுவாக விசாரணை நடத்த முடியாது என்று நீதிபதிகள்  மறுத்து விட்டனர்.இதேபோல் கொறடா உத்தரவு தொடர்பாக முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வரவில்லை.

பாலியல் புகார் வதந்தியால் கண்ணீர் விட்ட பாஜ எம்எல்ஏ

சட்டப்பேரவையில் நேற்று நம்பிக்கைகோரும் தீர்மானத்தின்  மீது விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, இடையில் எழுந்த மகாதேவபுரா தொகுதி  பாஜ எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவளி, சமூக வலைத்தளங்களில் என்னைப்பற்றி தவறான  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது எனது அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள  கரும்புள்ளியாக கருதுகிறேன். இன்று எனக்கு ஏற்பட்ட நிலைமை நாளை  மற்ற மக்கள் பிரதிநிதிக்கும் ஏற்படும். இதை தடுக்க வேண்டும்.  பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் மீது சிறிய தவறு வெளியில் வந்தாலும் அது  எப்படி பாதிக்கும் என்பது தங்களுக்கு தெரியும். நான் அரசியலில்  நேர்மை மற்றும் தூய்மைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன்.  எனது நேர்மையை களங்கப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் வந்துள்ள  தகவல் மிகவும் பாதித்துள்ளது. இவ்வாறு பேசிக்கொண்டு இருந்தபோது அவர்  திடீரென கண்ணீர் விட்டு அழுதார். அவரை சபாநாயகர் சமாதானம் செய்து, ‘‘உங்கள் மீது நம்பிக்கை உள்ளது. சமூக வலைத்தளங்களில் வந்துள்ளது பொய்  என்பது எனக்கு மட்டுமல்ல, அவையில் உள்ள அனைவருக்கும் தெரியும். கவலைப்பட  வேண்டாம்’’ என்றார். அரவிந்த் லிம்பாவளிக்கு பாஜ மட்டுமில்லாமல், ஆளும்  கட்சி உறுப்பினர்களும் ஆறுதல் கூறினர்.

அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சலுகை; சபாநாயகர் கேள்வி

மும்பையில் தங்கி இருந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் விமானம் மூலம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையம் வந்தனர். அவர்கள் பஸ்சில் விதானசவுதா வந்தபோது, பழைய ஏர்போர்ட் சாலையில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு விஐபிக்களுக்கான வசதி செய்து தரப்பட்டது. இதுபற்றி மஜத எம்எல்ஏ ஏ.டி.ராமசாமியின் கேள்வி எழுப்பினார். இதையடுத்து சபாநாயகர், உள்துறை அமைச்சர் எம்பி பாட்டீலிடம், போக்குவரத்தை நிறுத்தி வசதி செய்து கொடுக்க உத்தரவிட்டது யார்? சாதாரண விஷயத்தில் கூட கவனம் செலுத்த முடியாத நீங்கள் என்ன உள்துறை அமைச்சராக உள்ளீர்கள்? என கேள்வி எழுப்பினார். உள்துறை அமைச்சர் எம்பி பாட்டீல், இதுகுறித்து எனது கவனத்திற்கு போலீசார் கொண்டு வரவில்லை. எனக்கு தெரியாமல் நடந்துள்ளது என்று ஒப்புக்கொண்டார். உள்துறை அமைச்சரின் பதில் தனக்கு அதிருப்தி அளிப்பதாக கூறிய மஜத உறுப்பினர் ஏ.டி.ராமசாமி, அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

Related Stories: