பாளை சுப்பிரமணியபுரத்தில் 6 வைக்கோல் படப்பு தீயில் எரிந்து நாசம்

நெல்லை: பாளையில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 வைக்கோல் படப்பு எரிந்து நாசமானது. பாளை வஉசி மைதானம் அருகில் அமைந்துள்ளது சுப்பிரமணியபுரம். இங்கு விவசாய நிலங்கள் உள்ளன. அங்குள்ள பொது இடத்தில்  விவசாயிகள் வினோத், சொர்ணமணி மற்றும் பாளை தெற்கு பஜார் ஏட்டு கோனார் ஆகியோருக்கு  சொந்தமான 6 வைக்கோல் படப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.இந்நிலையில் இன்று நண்பகல் 11 மணி அளவில் வைக்கோல் படப்பில் தீப்பற்றி எரிய தொடங்கியது. அப்போது காற்று பலமாக வீசியதால் அருகில் உள்ள மற்ற வைக்கோல் படப்புகளுக்கு தீபரவி பற்றி எரிந்தது. தகவல் அறிந்து பாளை   தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையில் 2 வாகனங்களில் வீரர்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுபோல் நெல்லை மாநகராட்சி பொருட்காட்சி திடலில் நிறுத்தப்பட்டிருந்த தீயணைப்பு வாகனமும்  வரவழைக்கப்பட்டது.

3 வாகனங்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டபோதிலும் வாகனத்தில் இருந்த தண்ணீர் உடனடியாக தீர்ந்ததால் மீண்டும் தண்ணீர் கொண்டு வருவதில் பாதிப்பு ஏற்பட்டது. விபத்து நடந்த பகுதி குறுகிய பாதையாக  இருந்ததால் தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக திரும்பி செல்ல முடியவில்லை. இதையடுத்து மாநகராட்சி குடிநீர் லாரி வரவழைக்கப்பட்டு  தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. மேலும் தீவிபத்து ஏற்பட்ட பகுதியில் மின்வாரிய டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதனால் மின்விபத்து ஏற்படாமல் தடுக்க மின்வாரிய  அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு அப்பகுதியில் மின்இணைப்பை துண்டித்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தீவிபத்தில் 6 வைக்கோல் படப்புகளும் எரிந்து நாசமானது. சேதமதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. அப்பகுதி விவசாய நிலங்களில் அறுவடைக்குபின் எஞ்சியுள்ள காய்ந்த புற்களில் வைத்த தீ காற்றில் பரவி இந்த விபத்து  நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: