குன்னூர் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: வருவாய்த்துறை அதிரடி

குன்னூர்: குன்னூரில் பஸ் நிலையம் எதிரே ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 2 கடைகளை வருவாய்த்துறையினர் இன்று அகற்றினர்.  குன்னூர் நகர் பஸ் நிலையம் எதிரே டிடிகே ரோட்டில் ஆறு ஒன்று செல்கிறது.  இந்த ஆறு குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பர்லியார், கல்லார் பகுதியை கடந்து பவானி சாகர் அணையை அடைகிறது. நீலகிரியின் வன  விலங்குகளுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்த ஆறு கழிவுகளாலும், ஆக்கிரமிப்பாலும் மாசடைந்து வருகிறது. இந்த ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகளை  தன்னார்வலர்கள் அவ்வப்போது அகற்றி பராமரித்து வருகின்றனர். ஆனால்,  ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 60க்கும் மேற்பட்ட கடைகளை அகற்ற முடியாமல் வருவாய்த்துறை கடந்த பல ஆண்டுகளாக திணறி வந்தது.  

இந்நிலையில், கடந்த 2 மாதத்திற்கு முன்பு வருவாய்த்துறையினர் இங்குள்ள 45 கடைகளை  அகற்றினர். மீதமுள்ள கடைகளை அகற்ற முடியவில்லை. அவர்கள் சென்னை ஐகோர்ட்டில் ஆக்கிரமிப்பு அகற்ற தடை விதிக்கும்படி முறையீடு செய்திருந்தனர். இதனால் வருவாய்த்துறையினர் இதர கடைகளை அகற்றும் நடவடிக்கையை  ஒத்தி போட்டிருந்தனர். இந்நிலையில், மேல் முறையீடு செய்த கடைகளில் 2 கடைகளின் மீதான மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, குன்னூர் வருவாய்த்துறையினர் இன்று அங்குள்ள பேக்கரி மற்றும் செல்போன் ஆகிய 2  கடைகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  சப் கலெக்டர் ரஞ்சித்சிங், தாசில்தார் தினேஷ் முன்னிலையில் நடந்த ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு போலீசார் பாதுகாப்பு அளித்தனர். இது குறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில், விரைவில் இங்குள்ள இதர கடைகளும் அகற்றப்பட உள்ளது’  என்றனர்.

Related Stories: