3 பிள்ளைகள் பெற்றும் கவனிக்க ஆள் இல்லை பெற்ற தாயை தேவாலயத்தில் ஆதரவற்று விட்டு சென்ற மகன்: கண்ணீருடன் முதியோர் இல்லத்திற்கு சென்ற மூதாட்டி

சேலம்: சேலத்தில் பெற்ற தாயை வயது முதிர்ந்த காலத்தில், தேவாலயத்தில் ஆதரவற்று விட்டு சென்ற மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மூதாட்டியை, முதியோர் இல்லத்தினர் மீட்டனர். சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள சிஎஸ்ஐ இம்மானுவேல் தேவாலயத்தில், நேற்று காலை முதல் மாலை வரை ஒரு சேரில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தனியாக அமர்ந்திருந்தார். அவருடன் யாரும் இல்லை. அவர் வைத்திருந்த ஒரு  பேக்கில், 4 சேலைகள் மட்டும் இருந்தன. இதனை கண்ட தேவாலய நிர்வாகிகள், அந்த மூதாட்டியிடம் விசாரித்தனர். அதில், அதிர்ச்சிகரமான தகவல்களை அவர் கூறினார். அதன் விவரம் வருமாறு: சேலம் பாரதிநகரை சேர்ந்தவர் ஜாய்ராணி (82). அரசு மருத்துவமனையில் செவிலிய கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவரது கணவர், சர்வேயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.  கணவர் இறந்த நிலையில், தனது ஓய்வுக்கு பின் ஜாய்ராணி தனது மகன்கள் வீட்டில் தங்கியுள்ளார். ஒரு மகன் சென்னையிலும், மற்றொரு மகன் ராசிபுரத்திலும் வசிக்கின்றனர். மகளை சென்னையில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். 80  வயதை கடந்த நிலையில், ராசிபுரத்தில் உள்ள மகன் பராமரிப்பில் ஜாய்ராணி இருந்துள்ளார். அங்கு அவரை சரியாக கவனிக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான், நேற்று காலை தனது மகன், தன்னை காரில் அழைத்துக் கொண்டு வந்து, ஆலயத்தில் நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு சென்று விட்டார். இனிமேல் எனது வீட்டுக்கு வராதே.. என கறாராக கூறி விட்டுச் சென்றதாக  மூதாட்டி ஜாய்ராணி தெரிவித்தார். தாரை தாரையாக கண்ணீர் வடித்தபடி தனது மகனின் செயலை தெரிவித்தபோது, அங்கிருந்த அனைவரும் கண்ணீர் சிந்தினர்.

பின்னர், சேலம் கோரிமேடு போதிமரம் முதியோர் இல்லத்திற்கும், ஆதரவற்றோரை மீட்கும் சேலம் இளைஞர் குழுவினருக்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு முதியோர் இல்ல நிர்வாகிகள், இளைஞர் குழு நிர்வாகிகள் வந்தனர்.  அவர்கள், மூதாட்டி ஜாய்ராணியின் 2 மகன், ஒரு மகளை தொடர்பு கொண்டு பேசினர். அவர்கள், பெற்ற தாயை ஏற்கும் மனநிலையில் இல்லை என்பதை அறிந்தனர். இதையடுத்து போதிமரம் முதியோர் இல்லத்திற்கு, மூதாட்டி ஜாய்ராணியை  அழைத்துச் சென்றனர். நடக்க முடியாமல், கடைசி காலத்தில் தனது பிள்ளைகள் தன்னை கவனிக்கவில்லையே என மூதாட்டி பரிதவித்தபடி, அந்த இல்லத்திற்கு சென்றார்.

அப்போது அவர் கூறுகையில், ‘என்னை இனிமேல் எனது மகன் வீட்டிற்கு மட்டும் கொண்டுச் சென்று விடாதீர்கள். நான் இங்கேயே இருந்துவிட்டு போகிறேன்,’ என்றார். இதை கேட்டதும், இல்ல நிர்வாகிகள் கண் கலங்கினர். அரசிடம் இருந்து  ஓய்வூதியம் வரும் நிலையிலும், அந்த மூதாட்டியை கவனிக்க பிள்ளைகள் மறுத்து விட்டதை பார்க்கும்போது, மனிதநேயம் மரத்து போய்விட்டதோ என்ற எண்ணம் அனைவரது மனதிலும் எழுகிறது.

Related Stories: