விதிகளை மீறி மண் எடுக்கின்றனர் நரிக்குளம் பாலம் இடியும் அபாயம்

கன்னியாகுமரி: இந்தியாவின் வடஎல்லையையும், தென்எல்லையையும் இணைக்கும் வகையில் வாஜ்பாய் ஆட்சியில் காஷ்மீர்-கன்னியாகுமரி தங்கநாற்கர சாலை திட்டம் தொடங்கப்பட்டது. இதில் தென்எல்லையான கன்னியாகுமரியில் உள்ள  நரிக்குளத்தில் பாலம் அமைப்பதில் சட்ட சிக்கல் ஏற்பட்டது. இதனால் சாலை திட்டம் முழுமை பெறாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு வழக்குகள் முடிக்கப்பட்டு நரிக்குளத்தில் ரூ.22 கோடியில் பாலம் கட்டப்பட்டது. அதன்படி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி பாலத்தை திறந்து வைத்தார். பொது மக்கள் பயன்பாட்டுக்கு பாலத்தை திறந்து விட்ட சில நாளிலேயே பாலத்தை இணைக்கும் இணைப்பு சாலையில் விரிசல் ஏற்பட்டது. இதனால்  போக்குவரத்து நிறுத்தப்பட்டு அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. நரிக்குளத்தில் விதிமுறைகளை மீறி மண் எடுத்ததால் பாலம் இருப்பு இருந்துள்ளது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து பாலம் மேலும் சேதம் அடைவதை தடுக்க அருகில் மண் எடுக்க கூடாது என்று ஆய்வு செய்த அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பின் சாலையில் விரிசல் ஏற்பட்ட இடத்தில் ஒட்டு போடப்பட்டு போக்குவரத்துக்கு தொடங்கியது.  இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையின்படி மாவட்டத்தில் உள்ள குளங்களில் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி கன்னியாகுமரி போலீஸ் சரகத்திற்கு உள்பட்ட பகுதியில் உள்ள 11 குளங்களில் மண்  எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் நரிக்குளமும் அடங்கும். விவசாய பன்பாட்டுக்காக விவசாயிகள் மண் எடுக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நரிக்குளத்தில் விவசாயிகள் போர்வையில் மண் கடத்தும் கும்பல்  அனுமதி பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

ரியல் எஸ்டேட் அதிபர்கள் விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு இங்கிருந்து மண் எடுத்து செல்கின்றனர். இந்த குளத்தில் உள்ள மண் செங்கல் தயாரிக்க ஏற்ற மண்ணாக இருப்பதால் செங்கல்சூளைகளுக்கும் விற்கப்படுகிறது.  இதற்காக ஒரு லோடு மண்ணுக்கு ரூ.2000 கொடுத்து வாங்கி செல்கின்றனர். அதிக லாபம் கிடைப்பதால் நரிக்குளத்தில் இருந்து முறையாக மண் எடுக்கவில்லை.அவரவர் விருப்பப்படி ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் தோண்டி விதிமுறைகளை  மீறி மண் எடுக்கின்றனர். இதனால் நரிக்குளத்தில் உள்ள பாலம் முற்றிலும் இடியும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.  சாலையில் மண் கொண்டு செல்லும் போது பாரம் ஏற்ற அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் நரிக்குளத்தில் இருந்து அவசரம்  அவசரமாக மண் எடுப்பதால் டெம்போ மற்றும் லாரிகளில் விதிமுறைகளை மீறி மிக அதிக பாரம் ஏற்றி கொண்டு செல்கின்றனர். ஆகவே நரிக்குளத்தில் மண் எடுப்பதை தடுக்க வேண்டும். விவசாயிகள் போர்வையில் மண் கொள்ளையில்  ஈடுபடும் மாபியாக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலத்தை முழுமையாக சீரமைத்து மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: