கோட்டார் ரயில்வே ரோட்டில் சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கும் பணி தொடக்கம்: லாரிகள் அத்துமீறுவதை தடுக்க அதிரடி

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தின் மிகப்பெரிய வர்த்தக பகுதி கோட்டார் ஆகும். இங்கு ரயில்வே நிலைய ரோட்டில் சாலையின் இரு பக்கமும் ஏராளமான கடைகள், குடோன்கள் உள்ளன. நாள் ஒன்றுக்கு 200க்கும் மேற்பட்ட லாரிகளில் கொண்டு வரப்படும்  பலசரக்கு பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் இங்கு இறக்கி வைக்கப்படுகின்றன. சரக்குகள் கொண்டு வரும் லாரிகள் தற்போது ரயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான சாலையில் லாரிகளை நிறுத்தி சரக்குகளை ஏற்றி இறக்குகிறார்கள். இந்த சாலையின் வலதுபுறம் ரயில்வே பராமரிப்பிலும், இடதுபுறம் மாநகராட்சி பராமரிப்பிலும் உள்ளது. இந்த சாலையில் லாரிகள் இருபுறமும் நின்று சரக்குகளை ஏற்றி இறக்குவதால், கோட்டார் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி  ஏற்படுகிறது. கன்னியாகுமரிக்கு செல்லும் பஸ்கள் இந்த வழியாக தான் ரயில் நிலையத்துக்கு செல்கின்றன. லாரிகள் நிற்பதால், இந்த பஸ்கள் செல்ல முடியாமல் திணறுகின்றன.

பயணிகளும் குறிப்பிட்ட நேரத்துக்கு ரயில் நிலையத்துக்கு வர  முடிய வில்லை. எனவே ரயில் நிலைய ரோட்டில் லாரிகள் நிறுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது நெருக்கடியை தீர்க்கும் வகையில் லாரிகளில் சரக்குகள், ஏற்றி இறக்க கட்டுப்பாடுகள் கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதன் முதற்கட்டமாக, இந்த சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்படுகிறது. சிறிய அளவில் கான்கிரீட் தூண்கள் கட்டப்பட்டு இரும்பு கம்பிகள் நடப்படுகின்றன. இதனால் லாரிகள் ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்துக்கு செல்ல  முடியாது. சாலையின் வலது புறம் (ரயில்வேக்கு சொந்தமான இடத்தில்) பகுதியில் மட்டும் குறிப்பிட்ட நேரத்துக்கு லாரிகளை நிறுத்தி சரக்குகளை ஏற்றி இறக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

Related Stories: