மார்த்தாண்டம் மேம்பாலத்தில் உயிருக்கு உலை வைக்கும் கம்பிகள்: உடனே அகற்ற கோரிக்கை

மார்த்தாண்டம்: மார்த்தாண்டத்தில் நிலவிவந்த கடும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டு, தற்போது போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த மேம்பாலத்தின் பக்கவாட்டு பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள  இரும்பு கொக்கிகள் பக்கச்சுவர்களில் பொருத்தப்பட்டுள்ளன.இந்த கொக்கிகளின் ஒருபகுதி ஆபத்தான நிலையில் சாலையில் நீண்டு நிற்கின்றன. மேம்பாலத்தின் குறுகிய பகுதிகளிலும் இதுபோன்று இரும்பு கம்பிகள் நீட்டிக்கொண்டிருக்கின்றன. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட ஓரமாக  ஒதுக்கும்போது இந்த கம்பிகளில் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இரவு நேரங்களில் கவனக்குறைவாக வரும் வாகனங்கள் நீட்டிக்கொண்டிருக்கும் கம்பிகளில் சிக்கும் நிலை உள்ளது.

அதுபோல இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் இந்த கம்பிகளில் மாட்டிக்கொண்டால் உயிருக்கு உத்தரவாதம்  இல்லை. ேமலும் மோசமான விளைவுகள் ஏற்படும்.தினமும் இவ்வழியாக பல அரசு அதிகாரிகள், போலீசார் சென்று வந்தபோதும் ஆபத்தான கம்பிகளை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள யாருக்கும் விருப்பவில்லை. எனக்கு என்ன வந்தது என கண்மூடி இருக்கின்றனர். ஆனால் இதனால்  பொதுமக்கள் பாதிக்கப்படுவர் என்ற எண்ணம் எழவில்லை. எனவே பொதுமக்கள் நலன்கருதி மேம்பாலத்தில் ஆபத்தான நிலையில் மாட்டிக்கொண்டிருக்கும் கம்பிகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனித்து நடவடிக்கை  எடுப்பார்களா?

Related Stories: