குலசேகரம் அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால் பிறந்து இறந்த குழந்தை

குலசேகரம்: குமரி மாவட்டத்தில் முக்கியமான அரசு மருத்துவமனைகளில் ஒன்று குலசேகரம் அரசு மருத்துவமனை. சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மலை கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு பெரும் உயிர்நாடியாக இந்த மருத்துவமனை இருந்து வருகிறது. இங்கு போதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவதில்லை. மருத்துவ உபகரணங்கள் இருந்தும் அவற்றை இயக்க ஊழியர்கள் இல்லை. மருத்துவமனை வளாகம் புதர்மண்டி காணப்படுகிறது. அதை சுத்தப்படுத்த நீண்ட காலமாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு ஏராளமான ஏழை பெண்கள் மகப்பேறு மற்றும் பல்வேறு நோய்களுக்காக வருகின்றனர். இங்கு மகப்பேறு மருத்துவர்கள் இல்லாததால் இங்கிருந்து வேறு மருத்துவமனைகளுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

இந்த நிலையில் குலசேகரத்தை அடுத்துள்ள பொன்மனை குளச்சவிளாகம் பகுதியை சேர்ந்தவர் பெயிண்டிங் தொழிலாளி ஜித் (32) தனது மனைவி சரண்யாவை (24) இங்கு அழைத்து சென்றார். கர்ப்ப காலத்தில் இந்த மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்றார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சரண்யாவுக்கு கடந்த 19ம் தேதி மாலை 4.30 மணியளவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.  உறவினர்கள் அவரை உடனடியாக குலசேரகம் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் இல்லாதால் அங்கிருந்து நர்சுகள். இங்கு டாக்டர் இல்லாததால் உடனடியாக சரண்யாவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர். இதையடுத்து கணவர் மற்றும் உறவினர்கள் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் நிலைமை மோசமாக உள்ளது.  எனவே வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என கூறினார்.

இதையடுத்து மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அறுவை சிகிச்சை மூலம் சரண்யாவுக்கு குழந்தை பிறந்தது. குழந்தை அபாய கட்டத்தில் இருந்ததால் மருத்துவர்கள் குழந்தையை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்ட குழந்தை நேற்று பரிதாபமாக இறந்தது. இதனால் சரண்யாவின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். குலசேகரம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் இருந்திருந்தால் இந்த குழந்தை இறந்திருக்காது. இதுபோல் கடந்த சில வாரங்களுக்கு முன் குலசேகரம் மருத்துவமனையில் மருத்துவர் இல்லாமல் பிரசவம் நடந்ததால் ஒரு குழந்தை இறந்தது. இவ்வாறு தொடர்ந்து பிறக்கும் குழந்தை இறக்கும் சம்பவங்கள் நடப்பதால் நேற்று இந்து முன்னணியினர் குலசேகரம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இரவு மருத்துவர், மகப்பேறு மருத்துவர் உடனடியாக நியமிக்க வேண்டும்.

பிரசவத்தில் குழந்தை இறப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.தகவல் அறிந்து குலசேகரம் போலீசார் மற்றும் மருத்துவ துறை அதிகாரிகள் வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குழந்தை இறந்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் நேற்று அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மருத்துவர் வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை:  திருவட்டார் தாலுகா தனியாக பிரிக்கப்பட்டுள்ளதால் குலசேகரம் அரசு மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். இங்கு இரவு நேர மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர்கள் நிரந்தரமாக நியமிக்க வேண்டும். இங்குள்ள அனைத்து மருத்துவ சிகிச்சை கருவிகளையும் இயக்க போதிய தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்க வேண்டும். பிரசவத்தில் குழந்தை இறப்பதை தடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: